நியூயோர்க் நகரின் 2025 மேயர் தேர்தலில் 34 வயதான சொஹ்ரான் மம்தானி வெற்றி பெற்று, அந்த நகரின் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் மேயராக தெரிவாகியுள்ளார்.
அத்துடன் தெற்கு ஆசிய (இந்திய) வம்சாவளியை சேர்ந்தவர் அப்பதவிக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.
அவர் முன்னாள் நியூயோர்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோவை எதிர்த்து பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறந்த நகரமான நியூயோர்க்கில், “இவருக்கு வாக்களித்தால் நியூயோர்க் நகரத்திற்கான ஃபெடரல் (அரச) நிதி குறைக்கப்படும்” என்று எச்சரித்தும், 50 வீதத்திற்கும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் சொஹ்ரான் மம்தானி.
அதற்கமைய 1969ஆம் ஆண்டிற்கு பிறகு, நியூயோர்க் நகரத்தில் 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பதிவான சந்தர்ப்பம் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியதரவு ஆதரவுடன் செயல்பட்ட மம்தானி, தனது பிரசாரத்தின்போது வாழ்க்கைச் செலவை குறைப்பது, வாடகை கட்டுப்பாடு மற்றும் வீட்டு வசதி மேம்பாடு போன்ற சமூக ரீதியான முக்கிய கொள்கைகளை முன்வைத்திருந்தார்.
இவரது வெற்றி, நியூயோர்க் நகரில் இளம் தலைமுறையின் மாற்று அரசியல் எழுச்சியை வெளிப்படுத்துவதாக மதிக்கப்படுகிறது.
மம்தானியின் வரலாற்று வெற்றி அமெரிக்க அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மம்தானியை விமர்சித்து அவர் “கம்யூனிஸ்ட்” எனக் குறிப்பிட்டதோடு, அவரின் கொள்கைகள் நியூயோர்க் நகரின் நிலையான தன்மைக்கு ஆபத்தானவை என கூறியிருந்த போதிலும் அவர் இவ்வெற்றியை தனதாக்கியுள்ளார்.
சொஹ்ரான் மம்தானி ஜனவரி 01, 2026 அன்று நியூயோர்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்கவுள்ளார். இந்த வெற்றி அமெரிக்க முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளி சமூகங்களுக்கு ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது.
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயோர்க் நகரத்தின் இளம் மேயர் எனும் பெருமையும் இவர் பெற்றுள்ளார்.
சொஹ்ரான் மம்தானி உகண்டாவில் பிறந்தவர். இவரது தந்தை உகாண்டாவை சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானியாவார். இவரது தாய் இந்தியாவின் ஒடிசாவை சேர்ந்த மீரா நாயர் என்பவராவார்.
மீரா நாயர் திரைப்பட இயக்குநர் ஆவார். சலாம் பாம்பே, நியூயோர்க் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார்.
இன வேறுபாட்டுக்கு எதிரான மாற்றம், பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான மாற்றம், இலவச சிறுவர்கள் நலன், அரசாங்க பலசரக்கு கடைகள், இலவச பஸ் சேவை, பொலிஸாரிடமிருந்து உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் புதிய பாதுகாப்புத் துறை உள்ளிட்டவை நியூயோர்க் நகரத்தின் மேயர் தேர்தலில் அவர் முன்னெடுத்த முக்கிய பிரசாரங்களாகும்.
இந்தத் தேர்தலில் அவருக்கு எதிராக சுயநிர்ணய வேட்பாளர் மற்றும் முன்னாள் ஆளுநர் அண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோர் போட்டியிட்டனர்.
அண்ட்ரூ கியூமோவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் ட்ரம்ப், மேலும் இவருக்கு பெருமளவு நிதியுதவி செய்திருந்தார் உலகத்தின் முதன்மை பணக்காரரான எலான் மஸ்க்.
அமெரிக்காவில் மிக முக்கியமான நகரமாக நியூயோர்க் விளங்குகின்றது. ட்ரம்ப் பிறந்த நகரமும் இது. இந்த நகரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கையைத் தாண்டி, ட்ரம்ப் கட்சிக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பது மிக முக்கியமானது.
இது அந்த நகரத்தின் மக்களுக்கு ட்ரம்பின் மீதுள்ள அதிருப்தியை காட்டுகிறது என்றும் கருதலாம்.
தேர்தல் வெற்றிக்கு பிறகு, சொஹ்ரான் மம்தானி, “அரசியலில் மீண்டும் நம்பிக்கையை மீட்டெடுக்க நீங்கள் உதவியுள்ளீர்கள். இப்போதுள்ள அரசியல் இருளில், நியூயோர்க் நகரம் வெளிச்சமாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.
ஆயினும், இது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்தில், “இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் தோல்விக்கு இரண்டு காரணங்கள் உள்ளளன. ஒன்று, டொனல்ட் ட்ரம்ப் என்கிற பெயர் வாக்குச் சீட்டில் இல்லை. மற்றொன்று, இப்போது அமெரிக்காவில் அரச நிர்வாகம் மூடப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
34 வயதான மம்தானி 50% இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பெற்றதோடு, 67 வயதான குவோமோ 40% இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதேநேரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா 7% இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
(வாக்குகளின் இறுதி உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை)

No comments:
Post a Comment