ஹெரோயின் போதைப் பொருட்களைப் பொதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் 45,000 தாள்கள் (1″x1″) மீட்கப்பட்டுள்ளதோடு, அதனை அச்சிட்ட நிறுவனம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 09ஆம் திகதி பாணந்துறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய கிடைத்த பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்றையதினம் (14) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கட்டுபெத்த பிரதேசத்தில், குறித்த தனியார் நிறுவனத்தை சுற்றி வளைத்து பாணந்துறைப் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், ஹெரோயின் போதைப் பொருட்களைப் பொதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் 1×1 அங்குல அளவுள்ள 45,000 தாள்கள், கணனி ஒன்று, அச்சிடும் இயந்திரம், காகிதாதிகள், ஒரு கையடக்கத் தொலைபேசி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மொரட்டுவை பகுதியில் வசிக்கும், 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வெளிநாட்டிலிருந்து இலங்கையில் போதைப் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபடும் 3 நபர்களுடன் தொடர்பை பேணி வந்துள்ள அவர், இவ்வாறு குறித்த தாள்களை அச்சிட்டுள்ளமை தெரிய வந்ள்ளது.
இது தொடர்பான விரிவான விசாரணைகள் பாணந்துறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.



No comments:
Post a Comment