வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் திங்கட்கிழமை (03) தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் மாணவர்களின் மது விருந்து நீண்ட நேரம் இடம்பெற்ற நிலையில் சனிக்கிழமை காலை வவுனியா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மரணமடைந்த நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஆவார். குறித்த மாணவனுக்கு பகிடிவதையின்போது வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கியதால் மரணமடைந்துள்ளதாக மாணவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இருந்ததுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரனும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
அதன் பின் குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனைகள் இடம்பெற்றிருந்த நிலையில் இளைஞனின் மரணத்திற்கான காரணம் முழுமையாக கண்டறியப்படாத நிலையில் அவரது இரத்த மற்றும் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசேதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவன் உயிரிழந்தபோது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் விசாரணையின்போது, உயிரிழந்த மாணவரின் சகோதரி, கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment