கைதான குச்சவெளி பிரதேச சபை தவிசாளருக்கும், சாரதிக்கும் விளக்கமறியல் : நவம்பர் 13ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 1, 2025

கைதான குச்சவெளி பிரதேச சபை தவிசாளருக்கும், சாரதிக்கும் விளக்கமறியல் : நவம்பர் 13ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

கியாஸ் ஷாபி

​திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது பிரத்தியேக சாரதி ஆகியோர் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட இவர்கள், இன்று (01) காலை திருகோணமலை நீதவான் நீதி நீதிமன்றத்தின் பதில் நீதிபதி ஏ.எஸ். சாஹிர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

​ஒரு காணிக்குரிய அனுமதிப்பத்திரம் தயாரிப்பதற்காக கையூட்டலாக ரூ. 5 இலட்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேநபர்கள் ​குச்சவெளி – இக்பால் நகர் பிரதேசத்தில் வைத்து நேற்று (31) கைது செய்யப்பட்டு, நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

​முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

​குற்றம் சாட்டப்பட்ட பிரதேச சபை தலைவர், முறைப்பாட்டாளரின் காணியில் 20 பேர்ச் நிலத்துக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு ஆரம்பத்தில் ரூ. 1 இலட்சத்து 60 ஆயிரம் பெற்றுக்கொண்டு, பின்னர் எஞ்சிய பகுதிக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக ஐந்து லட்சம் ரூபாய் கோரிய நிலையில் குறித்த பெண் அதனை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பணத்தை பெற்றுக் கொள்ளும் போது அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

​விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

​குச்சவெளி பிரதேச சபை தலைவர் அய்னியஸ் முபாரக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸை பிரதிநிதித்துவப்படுத்துபவராவார். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, இரு கட்சிகளின் ஒத்துழைப்புடன் அவர் சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment