மின்சாரக் கட்டணங்களை 33% ஆல் குறைப்போம் என வாக்குறுதியளித்திருந்த ஜனாதிபதி தலைமையிலான தரப்பினர், மின்சாரக் கட்டணங்களை 6.8% ஆல் அதிகரிப்பதற்குத் தயாராகி வந்தனர். தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஏற்ப தலையாட்டி பொம்மை போல் நடந்து வருவதே இதற்கு காரணமாகும். தற்போதைய அரசாங்கம் IMF இன் பிரதிநிதிகளாக அல்லாது, தேர்தல்கள் மூலம் மக்களின் பிரதிநிதிகளாகவே ஆட்சிக்கு வந்தது. IMF இன் பிரதிநிதிகளாக அதன் தாளத்திற்கு ஆடுவதற்காக இந்நாட்டு மக்கள் தமது வாக்குகள் மூலம் தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சிக் கதிரைக்கு கொண்டுவரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் நேற்று (15) பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரிய பிரதேசத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தால், ஐக்கிய மக்கள் சக்தி வீதியில் இறங்கிப் போராடும் என்று எச்சரித்தல் விடுத்தமையால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக் கட்டண அதிகரிப்பில் அடுத்த 3 மாதங்களுக்கு திருத்தங்களை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்தது. அடுத்த 3 மாதங்களுக்குள் வாக்குறுதியளித்தபடி மின்சாரக் கட்டணங்களை 33% ஆல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ரூ. 9000 மின்சாரக் கட்டணத்தை ரூ. 6000 ஆகக் குறைப்போம் என்று மேடைக்கு மேடையாக வழங்கிய வாக்குறுதியை நம்பியே மக்கள் அரசாங்கத்தை நியமித்தனர். எனவே, மின்சாரக் கட்டணத்தைக் குறைத்துக் கொள்வதற்கு மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும் என்றும், இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தை வழங்கத் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது உரத்தை ரூ. 5,000 இற்கு பெற்றுத்தருவோன் என நான் தெரிவித்திருந்தேன். தற்போதைய அரசாங்கத்தின் ரூ.25,000 உர மானியத்தைக் கோரி தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டாலும், குறித்த தொகை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்தபாடில்லை. சில இடங்களில், அறுவடையும் முடிந்த பின்னமே இத்தொகை கிடைக்கப் பெறுகின்றன. விவசாய உபகரணங்களின் விலைகளும் கூட இப்போது அதிகரித்து காணப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
யானை-மனித மோதலால் ஏற்படும், சொத்துச் சேதம், பயிர்ச்சேதம் மற்றும் உயிர் இழப்புகளுக்கு இதுவரையில் முறையான இழப்பீட்டு முறைமைகள் இல்லை. இவற்றை பெற்றுக் கொள்வதற்கும் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது. கஷ்டங்களுக்கு மத்தியில் அறுவடை செய்தபோதும் உத்தரவாத விலைகள் கிடைத்தபாடுமில்லை. இப்போது, ஈர நெல் ரூ. 95 ஆக காணப்படுகின்றன. சட்டங்கள் ஊடாக ரூ.150 உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி வழங்கப்பட்டன. பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்புவதற்கும் கூட தடங்கல் ஏற்படுத்தப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment