இஷாரா செவ்வந்தியை கைது செய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை கூறினார்.
நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.
இஷாரா செவ்வந்தியை கைது செய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்தது. அப்படியானால் மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு எங்கே நேரம் இருந்தது. இப்போது இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு நேரம் உள்ளது.
பாதாள உலக கும்பல் மற்றும் போதைப் பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கத்திடம் பல வசதிகள் உள்ளன. எனவே பாதாள உலக கும்பல் மற்றும் போதைப் பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையில்லை.
ஆனால் அரசாங்கம் தவறு செய்தால், அதனை சுட்டிக்காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
No comments:
Post a Comment