(எம்.மனோசித்ரா)
பாதாள உலகக் குழுக்களுடன் காணப்படும் முரண்பாடுகளே எனது உயிர் அச்சுறுத்தலுக்கான காரணம் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை அடிப்படையற்றதாகும். அவ்வாறு கூறி எனது நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ள பொலிஸ்மா அதிபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது என்பதை ஆதரத்துடன் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்றத்தில் நிரூபித்திருக்கின்றேன். ஆனால் பொலிஸ்மா அதிபர் எனக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பிருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் காணப்படும் நபர்களின் பெயர் பட்டியலில் 24ஆவதாக என்னுடைய பெயர் காணப்படுகிறது. ஆனால் தொடர்புடைய குற்றச் செயல்கள் என பொலிஸ் அறிக்கையின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
மத்துகம ஷான் என்ற நபரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகக் கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எனக்கும் அந்த நபருக்கும் எவ்வித மோதலும் கிடையாது. அவருடன் முரண்பாடுகள் ஏற்படுமளவுக்கு எமக்கிடையில் எந்தவொரு கொடுக்கல், வாங்கலும் கிடையாது.
முச்சக்கர வண்டியொன்றில் சென்ற குழுவொன்று எனது குடும்பத்தாரிடம் என்னைப் பற்றி விசாரித்திருக்கின்றனர். இது தொடர்பில் குறித்த முச்சக்கர வண்டியின் இலக்கத்தோடு நான் மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்திருக்கின்றேன். ஆனால் அவ்வாறு விசாரித்தவர்கள் பொலிஸார் என பின்னரே தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரொருவருடைய இல்லத்துக்கு எதற்காக பொலிஸார் சிவில் உடையில் அனுப்பி வைக்கப்பட்டனர்? இது தொடர்பில் அவர்கள் ஏன் எனக்கு முன்னரே அறிவிக்கவில்லை?
உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸ்மா அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், எனக்கு தற்காலிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எந்த சந்தர்ப்பத்தில் எனக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டாலும், அதற்காக நான் பொலிஸாரிடம் கெஞ்சப்போவதில்லை.
பொலிஸ்மா அதிபரால் எனது நன்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கெதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். சபாநாயகரிடம் இது குறித்து தெரிவித்ததன் பின்னர், என் முன்னிலையில் சபாநாயகரால் பொலிஸ்மா அதிபரிடம் எனக்கான பாதுகாப்பை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இது குறித்து உரையாற்றியிருந்தார். அவ்வாறிருக்கையில் எனக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்கு எந்த அடிப்படையில் பொலிஸ்மா அதிபர் தீர்மானித்தார்? இதற்கு நீதிமன்றத்தில் பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
 
 
 

 
.jpg) 
 
 
 
 
No comments:
Post a Comment