41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் : நாட்டில் இதுவரை 23 உயிரிழப்புகள் பதிவு : பாடசாலை சூழலிலேயே அதிக பரவல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 28, 2025

41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் : நாட்டில் இதுவரை 23 உயிரிழப்புகள் பதிவு : பாடசாலை சூழலிலேயே அதிக பரவல்

(செ.சுபதர்ஷனி)

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் இதுவரை 22 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவல் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (28) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்து 324 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் இதுவரை 22 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

நுளம்பு பெருக்கத்தின் அதிகரிப்போடு 11 மாவட்டங்கள் தற்போது டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி, மட்டகக்களப்பு, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்கள் மேற்படி டெங்கு அபாயமுள்ள பகுதிகளாகும்.

பருவகால மலைவீழ்ச்சியை தொடர்ந்து 22 மாவட்டங்களில் நுளம்பு பரவல் தீவிரமடைந்துள்ளது. தொடரும் மழையுடன் கூடிய காலநிலை நுளம்பு பரவலுக்கு சாதகமாக அமைந்துள்ளதுடன், ஏனைய நாட்களுடன் ஒப்பிடுகையில் இக்காலப்பகுதியில் டெங்கு நுளம்பினங்கள் துரிதமாக பரவி வருவதாக குடம்பியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.

மனிதர்கள் நடமாடும் மற்றும் வசிக்கும் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பரவுகின்றன. அந்த வகையில் வீட்டுச்சூழல், வழிப்பாட்டுத் தளங்கள், பாடசாலை வளாகம், வர்த்தக நிலையங்கள், கைவிடப்பட்ட காணிகள், கட்டிட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களில் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நுளம்பு குடம்பிகள் தொடர்பில் அண்மையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 650,638 இடங்களை அதிகாரிகள் பரிசோதித்திருந்தனர். குறித்த சோதனையில் பாடசாலை சூழலிலேயே அதிக அளவில் டெங்கு நுளம்புகள் பரவியிருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

நிறைவடைந்த வாரத்திலிருந்து குறிப்பிடத்தக்களவில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பைக் காணக்கூடியதாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி, கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியம் என்றார்.

No comments:

Post a Comment