பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளதால் உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவு - சுனில் வட்டகல தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 29, 2025

பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளதால் உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவு - சுனில் வட்டகல தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

ஊழல் மோசடி உட்பட பல குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள்தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தமது உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வழக்கு ஒன்றுக்காக முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க 2024.08.19 ஆம் திகதியன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கண்டி தலதா பெரஹராவை நிறுத்துவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டதாக ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

இந்த போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக 2024.09.11 ஆம் திகதியன்று திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக பிரதமர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (நேற்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தான் குறிப்பிட்ட விடயத்தால் பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கமாட்டார் என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். கண்டி தலதா மாளிகை பற்றி குறிப்பிட்ட கருத்துக்கும், தேர்தலில் பிரதமர் வெற்றி பெற்றதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

இந்த வழக்கில் நட்டஈடு செலுத்துவதற்கு திஸ்ஸ அத்தநாயக்க 100 மில்லியன் ரூபாவை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குறிப்பிட்ட பொய்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலளிக்க வேண்டியுள்ளது.

ஊழல் மோசடி உட்பட பல குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள்தான் அரசாங்கத்துக்கு எதிராக இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.

பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தமது உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள். எதிர்க்கட்சியினரின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது என்றார்.

No comments:

Post a Comment