மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஊழல்வாதிகள்தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையவுள்ளார்கள் - மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 29, 2025

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஊழல்வாதிகள்தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையவுள்ளார்கள் - மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஊழல்வாதிகள்தான் எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையவுள்ளார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த கூட்டணியில் இணையாமல் இருப்பது எதிர்க்கட்சித் தலைவரின் அரசியல் கௌரவத்துக்கு சிறந்ததாக அமையும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கம்பஹா பகுதியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்போது பொலிஸ்மா அதிபர் அரசியல் செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். ரணில் - ராஜபக்ஷர்களின் காலத்தில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபசந்து தென்னக்கோன் எவ்வாறு அரசியல் செய்தார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

போதைப் பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். அரசியல் தலையீடுகள் ஏதுமில்லாமல் பொலிஸார் தமது கடமையை புரிகிறார்கள். அவர்களுக்கான சுதந்திரமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் சர்வாதிகாரத்துக்கு எதிராக எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி ஒன்றிணைவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். நாட்டு மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படவில்லை. மாறாக போதைப் பொருள் வியாபாரிகள், பாதாளக் குழுக்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராகவே செயற்படுகிறது.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஊழல்வாதிகள்தான் எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையவுள்ளார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த கூட்டணியில் இணையாமல் இருப்பது எதிர்க்கட்சித் தலைவரின் அரசியல் கௌரவத்துக்கு சிறந்ததாக அமையும்.

பிணைமுறி மோசடியாளர்களும், மோசடியாளர்கள் என்று குற்றம்சாட்டியவர்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள். நாட்டு மக்களின் நலன்களுக்காக இவர்கள் ஒன்றிணையவில்லை. தமது சுய நலனுக்காகவே ஒன்றிணைந்துள்ளார்கள். தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் பிரிவார்கள், ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்வார்கள் என்றார்.

No comments:

Post a Comment