மருந்து விலைகளை ஒழுங்குபடுத்தும் ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின் கீழ், இலக்கம் 2446/34 மற்றும் 2025.07.21 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஒழுங்குவிதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதிக்காக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் அந்தக் குழு அண்மையில் (10) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்து பரிசீலனை செய்த பின்னர் அனுமதி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின்படி மருந்துகளின் விலையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அந்த அதிகாரசபையிடமே உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
இந்த ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் 2017 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டாலும், 2023 ஆம் ஆண்டில் மருந்து இறக்குமதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து தாக்கல் செய்த வழக்கு ஒன்றிற்கு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவு காரணமாக 2023 டிசம்பர் 22 ஆம் திகதி முதல் விலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஒழுங்குபடுத்தும் முறைமை பிரசுரிக்கப்படாததே இந்த எதிர்ப்பிற்குக் காரணம் என்றும், அதற்கமைய, 2024 ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஒழுங்குபடுத்தும் முறைமையை வெளியிட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டாலும், அதுவும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியர் விஜேவிக்ரம குறிப்பிட்டார்.
அதற்கமைய, மீண்டும் 2025 ஜூலை 21 ஆம் திகதி 2446/34 ஆம் இலக்க வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
விலை நிர்ணயக் குழுவொன்றின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதாகவும் இந்தக் குழு ஒவ்வொரு துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டது என்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இது தாமதமான வர்த்தமானி என்றும், மருந்து இறக்குமதியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்த ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள், குறைபாடுகள் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறைகளில் உள்ள பல்வேறு விடயங்கள் இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கெளரவ சுகாதாரப் பிரதி அமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் (விசேட வைத்தியர்) அனில் ஜாசிங்க உட்பட அந்த அமைச்சுக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
.jpg)
No comments:
Post a Comment