அரசாங்கம் சட்டச் சிக்கிலை தீர்த்தால் அடுத்த முதற்காலாண்டில் தேர்தலை நடத்தலாம் - ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 26, 2025

அரசாங்கம் சட்டச் சிக்கிலை தீர்த்தால் அடுத்த முதற்காலாண்டில் தேர்தலை நடத்தலாம் - ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எமக்கு தெரியவில்லை. தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவறுகளினால் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்படவில்லை. பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையினால் ஏற்பட்ட சட்ட சிக்கலினால் மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வியாக்கியானம் கோரப்பட்டபோது பாராளுமன்றத்தின் ஊடாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று உயர் நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களினால் மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுவது ஜனநாயக அம்சங்களுக்கு முரணானது என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். மாகாண சபைத் தேர்தல் குறித்து இதுவரை காலமும் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் தரப்பினர் தற்போது விசேட கரிசனை கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் சட்டம் ஒன்று இல்லை. அடுத்தாண்டு முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின் இந்த ஆண்டுக்குள் மாகாண சபை சட்டத்தில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எமக்கு தெரியவில்லை. தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என்றார்.

No comments:

Post a Comment