(எம்.மனோசித்ரா)
அனுபவம் அற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது இயலாமையை மறைப்பதற்காக பொலிஸ்மா அதிபரை முன்னிறுத்தி ஆட்சியை முன்கொண்டு செல்ல முயற்சிக்கின்றது. போதைப் பொருள் ஒழிப்பு என்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்புக்களில் ஒன்று மாத்திரமேயன்றி, அது மாத்திரம் அரசாங்கத்தின் பொறுப்பல்ல. எனவே போதைப் பொருள் ஒழிப்பு நிகராக அபிவிருத்திகளில் அவதானம் செலுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எதுவுமே தெரியாத அமைச்சர்கள் குழுவொன்று தற்போது பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறது. அதனை மக்களும் உணர ஆரம்பித்திருக்கின்றனர்.
நாட்டிலிருந்து போதைப் பொருளை முற்றாக ஒழித்து நாட்டைக் கட்டியெழுப்புவது சிறந்த வேலைத்திட்டமாகும். எனினும் அது பொது நிர்வாகத்தின் பிரதான பொறுப்பல்ல. போதைப் பொருள் ஒழிப்பு என்பது அரச நிர்வாகத்தின் ஒரு பகுதி மாத்திரமேயாகும். கடந்த அரசாங்கங்களும் இதனை செய்திருக்கின்றன. ஆனால் அவை ஊடகங்கள் ஊடாக பாரிய பிரசாரங்களாக முன்னெடுக்கப்படவில்லை.
எவ்வாறு அரசாங்கத்தை நிர்வகிப்பது என்று தெரியாமல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திண்டாடிக் கொண்டிருக்கின்றார். அதனால் பொலிஸ்மா அதிபர் ஊடாக ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர்.
அந்த அடிப்படையிலேயே வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பான விசாரணைகளை சமூக ஊடகங்களில் பகிரங்கமாக முன்னெடுக்கின்றனர். இவ்வாறு பொலிஸ்மா அதிபரைக் கொண்டு ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம்.
போதைப் பொருள் பிரசாரங்களைத் தவிர அபிவிருத்திகள் தொடர்பிலோ முதலீடுகள் தொடர்பிலோ முதலீட்டு வருமானம் தொடர்பிலோ அரசாங்கத்தால் இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எதிர்க்கட்சிகளை ஒடுக்கி முன்னெடுக்கப்படும் அரசியலுக்கு மக்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எனவே முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். இனியும் மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்த முடியாது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் தினமே இந்த அரசாங்கத்தின் இறுதி தினமும் ஆகும் என்றார்.
.jpg)
No comments:
Post a Comment