பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில், பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் இன்று (31) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சியிலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பாதுகாப்பு வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருப்பதாக சபாநாயகர் இங்கு குறிப்பிட்டார்.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்திருந்தாலும், அதற்கும் அப்பால் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதற்கு அமைய சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இன்றையதினம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கோரிக்கை குறித்து சபாநாயகர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு தெரியப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
தமது அரசியல் செயற்பாடுகளை எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பான சூழலில் முன்னெடுத்துச் செல்வதற்கு சகல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலில் பாதுகாப்பை வழங்குமாறும், அதன் பின்னர் அச்சுறுத்தல் குறித்த மதிப்பாய்வை மேற்கொண்டு அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறும் இன்றை கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன மற்றும் இலங்கை பொலிஸின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
No comments:
Post a Comment