வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது : தப்பியோடிய மற்றுமொருவரை தேடும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 26, 2025

வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது : தப்பியோடிய மற்றுமொருவரை தேடும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CID யினரால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (26) அதிகாலை கெக்கிராவை, 50 வீடு (நிவாச 50) பகுதியில் சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF), இராணுவத்தினரின் உதவியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைவிடப்பட்ட வீட்டுடனான காணி ஒன்றை சுற்றிவளைத்த பாதுகாப்பு பிரிவினர் அங்கிருந்த ஆண், பெண் ஆகிய 2 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்ய சென்றபோது அங்கிருந்த சிலர் பொலிஸாருடன் மல்லுக்கு நின்ற நிலையில், சம்பவத்தில் பொலிஸார் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்ததன் அடிப்படையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களை கைது செய்யச் சென்ற வேளையில் அவர்களுடன் மல்லுக்கு நின்றபோது, அங்கிருந்த நுவன் தாரக எனும் மற்றுமொரு சந்தேகநபர் தப்பிச் சென்றதாகவும் அவரை கண்டுபிடிக்க உதவுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொன்தபென, பெந்திபிட்ட, அங்குலுகம பிரதேசத்தைச் சேர்ந்த, ஹக்மன பரனலியனகே நுவன் தாரக எனும் பெயரைக் கொண்ட குறித்த சந்தேகநபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் 5’6″ அங்கும் உயரம் கொண்டவர் எனவும், வலது கையின் மேற்பகுதியில் ‘ANURADA’ என ஆங்கிலத்திலும், இடது கையில் ‘හිතුමතේ ජීවිතේ’ (நினைத்தபடி வாழ்க்கை) என சிங்களத்திலும் பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் குறித்து தகவல்கள் தெரிந்தால் பின்வரும் தொடர்பு இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் மாஅதிபருக்கு : WhatsApp 71 8598888
CID இற்கு : 011 2337162/ 071 8592087

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிதி குற்ற விசாரணைப் பிரிவு, CID, தென் மாகாண பிரிவிற்கான குற்றவியல் விசாரணைப் பணியகம், மாத்தறை மற்றும் அநுராதபுரம் குற்ற விசாரணைப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்பைட மற்றம் இராணுவ அதிகாரிகள் ஒன்றிணைந்து தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment