3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்க திட்டம் : அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்த அதிகாரிகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 16, 2025

3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்க திட்டம் : அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்த அதிகாரிகள்

தற்போது 3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்காக நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தையும் இந்த ஆண்டு அச்சிட்டு வழங்குவதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் கருத்து தெரிவித்தனர். 

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான ஒரு மில்லியன் அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் குழுவில் அறிவித்தனர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்காக அவற்றை அச்சிடத் தேவையான அச்சு இயந்திரத்தை ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுவுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வாகன இலக்கத் தகடுகளை வழங்குவது குறித்தும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் இதன்போது வினவினார். 

அதற்கமைய, அதற்கான வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும் செயன்முறை தற்போது நடைபெற்று வருவதாகவும், அமைச்சரவையின் அனுமதியை அடுத்து அச்செயன்முறையை நிறைவு செய்து இலக்கத் தகடுகளை வழங்கும் செயன்முறையை ஆரம்பிக்க முடியும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள பயணிகள் போக்குவரத்து தொடர்பான ஒருங்கிணைந்த கால அட்டவணை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

ஒருங்கிணைந்த கால அட்டவணையை செயற்படுத்துவது ஒரு கொள்கையாக இருப்பதால், அதிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, பயணிகளுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக எதிர்காலத்தில் மேலும் பல பகுதிகளுக்கு இதனை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், புகையிரதத் தண்டவாளங்களில் யானைகளுக்கு ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டம் குறித்தும் தகவல்களை முன்வைத்தார். 

அதற்கமைய, 2.8 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்புப் பாதையில் பயணிக்கும் புகையிரதங்களுக்கு தொலைநோக்குத் தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

இதன் மூலம் காட்டு யானைகள் புகையிரதத்தில் மோதும் சம்பவங்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் கண்காணிக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான தீர்வுகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment