துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் “டிங்கர்” எனப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன், கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபரை நாளை (03) வரை 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசப் புலனாய்வுச் சேவை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் பொலிஸ் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு, விமான நிலையக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பேலியகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதன்படி, சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கொழும்பு 15 இல் வசிக்கும் 36 வயதுடைய மேற்படி சந்தேகநபர், திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பழனி ஷிரான் க்ளோரியன் அல்லது “கொச்சிக்கடை ஷிரான்” என்பவரின் உதவியாளர் என்றும் இனங்காணப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிலுள்ள மஹவத்த பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காரின் சாரதியாக இவர் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பேலியகொடை பொலிஸ் பிரிவிலுள்ள ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொன்று, மற்றொரு நபரை கடுமையாகக் காயப்படுத்திய குற்றத்தை முன்னெடுக்க தேவையான துப்பாக்கிகளை கொண்டு சென்றவர் என்ற ரீதியில் இவர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதும், முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றமை தெரியவந்தது.
இந்நிலையில் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேகநபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற ‘டிங்கர்’ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று அதிகாலை )01) கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment