போதைப் பொருள் பாவனைக்கு 2,30982 மாணவர்கள் அடிமையாகியுள்ளார்கள் : பாதாளக் குழுக்கள் செயற்பாடுகளில் முன்னிலையில் தென் மாகாணம் - சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 29, 2025

போதைப் பொருள் பாவனைக்கு 2,30982 மாணவர்கள் அடிமையாகியுள்ளார்கள் : பாதாளக் குழுக்கள் செயற்பாடுகளில் முன்னிலையில் தென் மாகாணம் - சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230982 பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர். பாதாளக் குழுக்கள் செயற்பாடுகளில் தென் மாகாணம் முன்னிலையில் உள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

அக்குறணை கொடபிடிய தேசிய பாடசாலையில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் ஆவர். அதில் அதிகமானவர்கள் குறைவான எழுத்தறிவு மட்டத்தில் காணப்படுகின்றனர். போதைப் பொருள் பாவனை மற்றும் பாதாளக் குழுக்களுடன் தொடர்புப்பட்ட குற்றங்களுக்காகவே அதிகளவானோர் சிறையில் உள்ளார்கள்.

தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளனர். வழக்குகளை விசாரித்து 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். 5 ஆண்டுகள் வரை தாயும், குழந்தையும் ஒன்றாக இருக்க அனுமதிக்கிறோம். 5 வயது பூர்த்தியாகும் நாளில் குழந்தையையும், தாயையும் பிரித்து வைக்கின்றோம். அது என் வாழ்க்கையில் நான் கண்ட மிக சோகமான சந்தர்ப்பங்களில் ஒன்றாகும்.

குழந்தை அம்மாவை கேட்டு அழும், அம்மாவும் குழந்தையை கேட்டு அழுவார். 5 வருடங்களாக அவர்களுக்கு இருந்த ஒரே உறவு அதுதான். அதில் சட்டம் குறுக்கிடுகிறது. அதனால் ஒருபோதும் ஒரு பெண்ணாக நீங்கள் தவறு செய்யாதீர்கள். போதைப் பொருள் இல்லாத நாட்டை உருவாக்க அரசாங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது .

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் மாத்திரம் 2, 30982 மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.

போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளில் தென் மாகாணம் முன்னிலையில் உள்ளது. போதைப் பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒட்டு மொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.       

No comments:

Post a Comment