(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளமையானது இரு கட்சிகளுக்கிடையிலான சமூகமான உறவை மேலும் மேம்படுத்தும். எனவே ஐக்கிய தேசிய கட்சியின் இந்த தீர்மானம் எந்த வகையிலும் எமக்கு சவாலானதாக அமையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு எடுத்துள்ள தீர்மானம் குறித்து வினவியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துள்ளவர்களுடன் சுமூகமான உறவைப் பேணுவதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது என நம்புகின்றோம்.
எவ்வாறிருப்பினும் நாம் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்களாகவுள்ளோம். எனவே ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானம் தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு நாம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு உந்துதல் அளிக்கும் வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி என்பது எமது சகோதர அரசியல் கட்சியாகும். நாம் அக்கட்சியிலிருந்து விலகியே ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம். கொள்கை ரீதியான காரணிகளில் சில முரண்பாடுகள் மாத்திரமே எமக்குள் காணப்படுகின்றன. ஆனால் எமது இரு கட்சிகளினதும் இலக்கு ஒன்றாகவே காணப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனில் ஒரே கொள்கையும் இலக்கும் கொண்ட கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும்.
தற்போது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ள நாம், எதிர்காலத்தில் அரசியலுக்காக எவ்வாறு ஒன்றிணைவது என்பது குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுப்போம். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை என்ற விடயம் தேவையற்றது. நாம் ஐக்கிய மக்கள் சக்தியினராக எமது நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எவ்வாறிருப்பினும் இந்த தீர்மானம் இரு கட்சிகளுக்கிடையிலான சுமூகமான உறவை மேலும் மேம்படுத்தும்.
அரசாங்கம் செல்லும் பாதை யாருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. கிராம மட்டத்திலுள்ள மக்களிடம் இதனைக் கேட்டு அறிந்து கொள்ள முடியும். எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறைகளை விடுத்து பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்துக்கு நினைவு படுத்துகின்றோம் என்றார்.
.jpg)
No comments:
Post a Comment