இலஞ்சம், ஊழலுடன் தொடர்புடைய பொது சேவைகளில் முதலிடத்தில் பொலிஸ் : நிறுவனங்களை வரிசைப்படி பட்டியலிட்டு காட்டிய ஆணைக்குழு தலைவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 27, 2025

இலஞ்சம், ஊழலுடன் தொடர்புடைய பொது சேவைகளில் முதலிடத்தில் பொலிஸ் : நிறுவனங்களை வரிசைப்படி பட்டியலிட்டு காட்டிய ஆணைக்குழு தலைவர்

(எம்.மனோசித்ரா)

இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் பொலிஸ் முதலிடம் வகிக்கிறது. அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள் என முக்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நிலைமை மாற்றப்பட்டால் மாத்திரமே இலஞ்ச, ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணைகள் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவு தொடர்புடையது பொலிஸார் என எம்மால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

"2024 ஆம் ஆண்டில், தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம். அதில், பொதுமக்கள், இலஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகக்கூடிய நிறுவனங்களாகத் தேர்ந்தெடுத்த 10 நிறுவனங்களைப் பற்றி நான் உங்களுக்குச் கூறுகிறேன்.

இவ்வாறு இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய பட்டியலில் முறையே பொலிஸார், அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள், காணி பதிவு அலுவலகம், மாகாண சபைகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், பிரதேச செயலகம், பதிவாளர் நாயகம் அலுவலகம் மற்றும் நீதிமன்றம் என்பன காணப்படுகின்றன.

மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இவை இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய முதல் 10 நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய 5 பிரதான நிறுவனங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் முதலாவது சுங்கத் திணைக்களம், இரண்டாவது உள்நாட்டு வருமான திணைக்களம், கலால் வரித் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் என்பன முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.

இவை தவிர மேலும் பல நிறுவனங்கள் பண சுத்தீகரிப்பிற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுகின்றன. எம்மால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில் ஊழல், மோசடிக்கு ஏதுவான காரணிகளாக மக்கள் கூறியவற்றில் பல முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன.

பின்னர், நான் குறிப்பிட்ட கணக்கெடுப்பில், ஊழல் கலாச்சாரத்திற்கு பங்களிக்கும் காரணிகளாக பொதுமக்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர்.

நாட்டில் சட்டம், அமைதி முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை, மோசடி கலாசாரம் நாட்டில் தலைதூக்கியுள்ளமை, அரச சேவையில் வழங்கப்படும் மிகக்குறைந்த சம்பளம், இலஞ்சம், ஊழல் தொடர்பில் மக்கள் உரிய நடவடிக்கை எடுக்காமை என்பனவாகும். எனவே இவற்றை இல்லாதொழிப்பதறக்கான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment