அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு, உள்ளூராட்சி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் : வெளிநாட்டு கடன்கள், உதவிகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இனிமேல் விசேட திட்ட அலுவலகங்கள் கிடையாது - மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 11, 2025

அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு, உள்ளூராட்சி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் : வெளிநாட்டு கடன்கள், உதவிகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இனிமேல் விசேட திட்ட அலுவலகங்கள் கிடையாது - மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி

அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

அரசியல் அதிகாரம் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களை பயன்படுத்தும் கலாச்சாரம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முடிவுக்கு வந்துள்ளது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய திட்டத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் 2025 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவும் இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற துறைகளுடன் தொடர்புடைய அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளும் இங்கு ஆராயப்பட்டன.

வெளிநாட்டு கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் நாட்டிற்கு கிடைக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் விசேட திட்ட அலுவலகங்களை நிறுவுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடர்புடைய திட்டங்களை நிறைவு செய்து, மக்களுக்கு நன்மைகளை வழங்குமாறு மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

பாடசாலை கட்டமைப்பை நெறிப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வலய மட்டத்தில் ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று அவற்றை நெருக்கமாக ஆராய்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கான சிறந்த தீர்வை முன்வைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர்கள் ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார, அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

No comments:

Post a Comment