எதிர்க்கட்சியினர் சேறுபூசத் தேவையில்லை ஆளும் தரப்பினரே சேறுபூசுகிறார்கள் : மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதை விடுத்து பொய் என்று குறிப்பிடக்கூடாது - இம்ரான் மஹரூப் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 11, 2025

எதிர்க்கட்சியினர் சேறுபூசத் தேவையில்லை ஆளும் தரப்பினரே சேறுபூசுகிறார்கள் : மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதை விடுத்து பொய் என்று குறிப்பிடக்கூடாது - இம்ரான் மஹரூப் தெரிவிப்பு

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் கிழக்கு மாகாண மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும்போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அதனை எவ்வாறு பொய்யென்று குறிப்பிட முடியும். அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சேறுபூசத் தேவையில்லை. ஆளும் தரப்பினரின் கருத்துக்களே அரசாங்கத்துக்கு சேறுபூசுவதாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த பாராளுமன்ற அமரவின்போது திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களில் முஸ்லிம் தாதியர்கள் மற்றும் பெண் சேவையாளர்கள் கலாசார ஆடையுடன் சேவையில் ஈடுபடக்கூடாது என்று சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் அறிவித்திருந்ததை சபையில் சுட்டிக்காட்டினேன்.

இந்த விடயத்தை நான் குறிப்பிட்டதன் பின்னர் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மி சரிப் நான் பொய்யுரைப்பதாகவும், அவ்வாறு ஏதும் நடவடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட சுகாதார திணைக்கள ஊழியர் சங்க உறுப்பினர்கள் பிராந்திய சேவைகள் பணிப்பாளரின் தீர்மானம் தொடர்பில் எனது அலுவலகத்துக்கு வந்து முறைப்பாடளித்துள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரங்களை முன்வைத்துள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி நாங்கள் குறிப்பிடும்போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அதனை எவ்வாறு பொய், பிழை என்று குறிப்பிட முடியும்.

இன்று உங்களின் மாவட்டங்களில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு உங்களின் அரசாங்கத்துடன் பேசி தீர்வுகளை பெற்றுக் கொடுங்கள் எமது மாகாணத்தின் பிரச்சினைகள் பற்றி நான் குறிப்பிட்ட விடயங்கள் பொய் என்பதை இந்த உறுப்பினர் நிரூபிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு மற்றும் நெருக்கடி ஏற்பட்டால் அதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து முன்வைக்கப்படும் விடயங்கள் பொய் என்று குறிப்பிடக்கூடாது. பிழை என்று குறிப்பிட்டால் அதற்கான நியாயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த உறுப்பினர் நாங்கள் அரசாங்கத்துக்கு சேறு பூசுவதாக குறிப்பிடுகிறார்.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளை சுட்டிக்காட்டும்போது ஆளும் தரப்பின் முஸ்லிம் உறுப்பினரே அதற்கு எதிராக பேசுகிறார்கள். இவர்களே அரசாங்கத்துக்கு சேறுபூசுகிறார்கள்.

கடந்த காலங்களில் அனைத்து சிறந்த விடயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்த நீங்கள் இன்று சமூக வலைத்தளங்கள் பற்றி பேசுகின்றீர்கள். யூடியூபர்களில் எத்தனை பேர் ஊடக ஒருங்கிணைப்பாளராக இந்த அரசாங்கத்தில் சம்பளம் பெறுகிறார்கள் என்பதை குறிப்பிட முடியுமா?

பல ஊடகங்கள் இந்த அரசாங்கத்துக்கு சார்பாகவே செயற்படுகின்றன. மக்கள் மிக தெளிவாகவுள்ளார்கள். தவறுகளை நிவர்த்திக் கொள்ளுங்கள். திருகோணமலை முத்துநகர் விவசாயிகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமளிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment