ஒரே கையெழுத்தில் தீர்ப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் ஒரு வருடம் கடந்தும் தீர்க்க முடியவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 18, 2025

ஒரே கையெழுத்தில் தீர்ப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் ஒரு வருடம் கடந்தும் தீர்க்க முடியவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

'ஒரே கையெழுத்து மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம்' என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், ஒரு வருடம் கடந்தும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

அனுராதபுரம் விலச்சிய பகுதியில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும், எதிர்க்கட்சி இப்பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்கும்போது ஒலிவாங்கிகளை துண்டித்து அதைத் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் திறமையாக உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

சபை அமர்வில் நாம் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கும்போது, அது நிலையியற் கட்டளைகளுக்குப் புறம்பானது எனக் கூறுகின்றனர். அரசாங்கம் இவ்வாறு செயற்பட்ட போதிலும் எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை எவ்வாறேனும் பாராளுமன்றத்தில் முன்வைத்து பதில்களைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றும் எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.

30 வருட விடுதலைப் புலிகளின் பயங்கரவாத யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஆகியும், விலச்சிய பகுதி மக்கள் இன்னும் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகின்றனர். யானை-மனித மோதல்கள், பயிர் சேதம், மற்றும் அறுவடைக்கு நிலையான விலை இன்மை போன்ற பன்முக நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். அறுவடைக்கு சரியான விலை கிடைக்காததால் அவை வீடுகளில் குவிந்து கிடக்கின்றன. பயிர் சேதத்திற்கோ அல்லது உயிர் இழப்பிற்கோ இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதாகக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடம் எந்தவிதமான நடைமுறை சாத்தியமான தீர்வுகளும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியாக விவசாயிகளுக்காக முடிந்தவரை குரல் கொடுக்கும். விவசாயிகளுக்காக செய்யக்கூடிய அனைத்துப் பணிகளையும் செய்யும் என்று சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

60-70 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்த காணிகள் இன்று அரசியல் காரணங்களுக்காக அபகரிக்கப்படுவதாகவும், இதனால் விவசாய சமூகத்தின் வாழ்வாதாரம் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

'இந்தக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இங்கு வந்து தீர்வு வழங்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாம் மக்களின் மத்தியில் வந்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து வருகிறோம்' என்றார்.

தற்போது தான் பங்கேற்கும் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஆளும் தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டினார். 'மக்கள் படும் துன்பத்தை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளாவிட்டாலும், நாம் புரிந்து கொண்டுள்ளோம்.

மக்களுக்கு ஏதாவது செய்யும்போது, பொருட்களை விநியோகிக்கும் அரசியலில் ஈடுபடுவதாக நம்மை கேலி செய்கின்றனர். சேவை செய்வதை அரசியலாகக் கருதும் எமது அணுகுமுறைக்கு வரும் விமர்சனங்கள் எமது முயற்சிகளை நிறுத்தாது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment