குறிப்பிட்ட நேரத்தில் கடமைக்கு சமூகமளிக்காமை, சில தீர்மானங்களை முறையாகத் தயாரிக்காமை அவற்றை வழக்கு கோப்பில் சேர்க்காமை மற்றும் தனது கடமைகளை முறையாகச் செய்யத் தவறியமை முதலான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட மத்துகம நீதவான், தனது பதவி இராஜினாமா கடிதத்தை நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.
மத்துகம நீதவான் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிச் சேவை ஆணைக்குழுவின் தலைவர் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் உறுப்பினர் உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன ஆகியோரால் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக ஆணைக்குழுவின் செயலாளரும் சிரேஷ்ட உதவி செயலாளரும் சில நாட்களுக்கு முன்பு அந்த நீதிமன்றத்திற்கு நேரில் சென்று இந்த விடங்களில் கவனம் செலுத்தினர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஆஜராகும் அதிகாரிகள் போல் மாறுவேடத்தில் நீதிமன்ற அறைக்குள் பிறவேசித்த இவர்களால், அன்றையதினம் காலை 10.00 மணிக்கு பிறகும் நீதவான் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்துள்ளது.
குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மேலதிகமாக, தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்திய நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் உட்பட இரு அதிகாரிகளும், நீதிமன்றத்தால் பெறப்பட்ட சில கடிதங்கள் நீண்ட காலமாக திறக்கப்படவில்லை என்பதையும், நீதவான் எடுத்த விடுமுறை 2024 முதல் நீதித்துறை சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.
ஊழியர்களுடன் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட நீதவான் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணைகளின்போது, அவர் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க நீதவான் நடவடிக்கை மேற்கொண்டார்.
உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த காலத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக பணியாற்றிய பிரிதி பத்மன் சூரசேன, புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட பிறகு, நீதிச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நீதிச் சேவையை மிகவும் திறமையாகவும், பொதுமக்களுக்கு நட்பானதாகவும், மேலும் நம்பகமானதாகவும் மாற்றும் நோக்கில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் பரிந்துரைகளை உன்னிப்பாக கவனிக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரை அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக , நீதிச் சேவை ஆணைக்குழு கடந்த சில வாரங்களாக, பெறப்பட்ட ஒவ்வொரு முறைப்பாடு தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பித்த பின்னர், தவறான நடத்தைக்கு ஆளான நீதிபதிகள் உட்பட 15 க்கும் மேற்பட்ட நீதி அதிகாரிகளை (நீதிபதிகள்) அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கவும், சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு நீதவானாக பணியாற்றியபோது தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, இதுவரை கொழும்பு இலக்கம் 8 நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவானாக பணியாற்றிய பின்னர் மாத்தறை மாவட்ட மேலதிக நீதிபதியாக இடமாற்றப்பட்ட நீதிபதியை உடனடியாக பணி நீக்கத்திற்கான கடிதத்தை வழங்க நீதிச் சேவை ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பல நீதிபதிகளுக்கெதிராக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கும் நீதிச் சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:
Post a Comment