(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. வன்னி மாவட்டத்தில் காணி அபகரிப்பு தீவிரமடைந்துள்ளது. தொல்பொருள் திணைக்களம், வன வளத் திணைக்களம் ஆகியவை மக்களின் காணிகளை அபகரித்துள்ளன. இது பாரியதொரு மனித உரிமை மீறலாகும். இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்துங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குங்கள். கடந்த கால தவறுகளை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என இலங்கை தொழில் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணையை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன. இதனால்தான் ஒரு தரப்பினர் ஆயுதம் ஏந்தினார்கள். சிவில் யுத்தம் தோற்றம் பெற்றது. அடிப்படை பிரச்சினைகள் இன்றுவரை தொடர்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் தொடர்பில் அவர்களது உறவினர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் உண்மை மற்றும் நீதி தேடி போராடும் உறவுகளுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. இதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு உண்டு. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் போராடிய காலத்தில் அவர்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அவர்களும் பாதிக்கப்பட்டார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இன்றும் பெரும்பான்மை மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் உறுதியாக குறிப்பிட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஏதும் நடக்கவில்லை. ஆகவே வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுங்கள். அப்போதுதான் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இராணு முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
வன்னி மாவட்டத்தில் காணி அபகரிப்பு தீவிரமடைந்துள்ளது. தொல்பொருள் திணைக்களம் வன வளத் திணைக்களம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளன. இது பாரியதொரு மனித உரிமை மீறலாகும். இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்துங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குங்கள். கடந்த கால தவறுகளை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும்.
பல்வேறு தீர்மானங்களால் முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. புனித திருக்குர்ஆனை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பாரியதொரு மனித உரிமை மீறலாகும். கடந்த அரசாங்கம் அதனை செய்தது என்று குறிப்பிடாதீர்கள். இந்த விவகாரத்தக்கு உடன் தீர்வு பெற்றுக் கொடுங்கள் என்றார்.
No comments:
Post a Comment