(எம்.மனோசித்ரா)
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால், அது தொடர்பான விவாதத்தில் மகிழ்ச்சியாக பங்கேற்போம். அவ்வாறு விவாதம் இடம்பெற்றால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார தொடர்பில் கூற வேண்டியுள்ள பல விடயங்களை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்து அது தொடர்பில் விவாதிக்கப்படுமானால் அது எமக்கு மிக்க மகிழ்ச்சியாகும்.
நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தவர்கள் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியது பாராளுமன்ற சம்பிரதாயமாகும். அவ்வாறு சமர்ப்பித்தால் அது குறித்த விவாதத்தின்போது தெரிவிப்பதற்கு பல விடயங்கள் எம்வசம் உள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதற்கு முன்னர் கூறியவற்றை விட மேலும் பல தகவல்கள் எம்மிடமுள்ளன. விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எவ்வாறிருப்பினும் பிரதி அமைச்சருக்கெதிராக இவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க முடியுமா இல்லையா என்பதை எதிர்க்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். அது எமது பிரச்சினையல்ல.
பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கமையவோ அல்லது இலங்கையின் பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கமையவோ நம்பிக்கையில்லா பிரேரரணையை எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்தால், அது தொடர்பான விவாதத்தில் மிகவும் மகிழ்ச்சியாக நாம் பங்கேற்போம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றபோது அப்போதைய அரசாங்கத்தில் மூன்றாவது முக்கிய நபராக இருந்த சஜித் பிரேமதாச மற்றும் அப்போதைய பொலிஸ் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தொடர்பில் கூற வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவற்றை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பொன்றை எதிர்க்கட்சிகள் உருவாக்கிக் கொடுக்குமெனில் அதனை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.
எனவே அனைவரும் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பியுங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment