(எம்.மனோசித்ரா)
தபால் சேவை உத்தியோகத்தர்களுக்கு இதற்கு மேல் மேலதிக வேலை நேர கொடுப்பனவை அதிகரிக்க முடியாது. அதேபோன்று கை விரல் ரேகைப் பதிவிட முடியாது எனக் கூறுவதையும் ஏற்க முடியாது. இந்த பிரச்சினைக்கு இம்முறையாவது தீர்வு காண வேண்டும். எனவே இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை சற்றுப் பொறுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம கேட்டுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களால் 19 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தபால்மா அதிபருடனும், அமைச்சின் செயலாளருடனும் குறித்த தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றன.
எனினும் அந்த பேச்சுவார்த்தைகளின் ஊடாக பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை அவர்களிடம் அவதானிக்க முடியவில்லை. ஆனாலும் அவர்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளில் 17 விடயங்கள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளன. ஏனையவை தற்போது தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நியமனங்கள், இடமாற்றங்கள், ஆட்சேர்ப்புக்கள் உள்ளிட்டவற்றுக்கான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை அவர்களும் அறிவர்.
தபால் திணைக்களத்துக்கான வாகன தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு 250 பில்லியன் ரூபா இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் தபால் செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய தபாலகங்களுக்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தபால் துறைக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்டிராத முன்னுரிமை எமது ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது எஞ்சியுள்ள இரு பிரதான பிரச்சினைகள் வருகையைப் பதிவு செய்வதற்கான கை விரல் ரேகைப் பதிவு இயந்திரம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவாகும்.
சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாண்டு ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பள அதிகரிப்பின் முதற்கட்டம் கடந்த ஏப்ரலிலிருந்தும், இரண்டாம் கட்டம் 2026 ஜனவரியிலிருந்தும், அடுத்த கட்டம் 2027 ஜனவரியிலிருந்தும் வழங்கப்படும்.
அதற்கமைய அடிப்படைச் சம்பளம் பாரியளவில் அதிகரிக்கப்படுகிறது. எனவே தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எவருக்கும் கூற முடியாது. யாரும் கேட்காதளவுக்கு சிறந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்கமையவே மேலதிக வேலை நேர கொடுப்பனவு கணக்கிடப்படுகிறது. 2027 ஜனவரியில் கிடைக்கவுள்ள அடிப்படைச் சம்பளத்துக்கமையவே இவ்வாண்டு மேலதிக வேலை நேர கொடுப்பனவு கணக்கிடப்படுகிறது.
எனினும் சில துறைகளில் அந்தளவு மேலதிக வேலை நேர கொடுப்பனவை வழங்கினால் அது திறைசேரிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
எனவே அவ்வாறான சேவையிலுள்ளோருக்கு நான்கில் மூன்று, ஆறில் ஐந்து என்ற அடிப்படையில் மேலதிக வேலை நேர கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
தபால் சேவையில் சுமார் 23000 உத்தியோகத்தர்கள் உள்ளனர். அவர்களுக்கு 2027 ஜனவரியில் கிடைக்கவுள்ள அடிப்படைச் சம்பளத்துக்கமைய மேலதிக வேலை நேர கொடுப்பனவு கணக்கிடப்பட்டு அதில் ஆறில் ஐந்து என்ற ரீதியில் வழங்கப்படுகிறது. இது போதாது எனக் கூறினால் அது நியாயமற்றது.
அரச சேவை தொடர்பில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள கொள்கை ரீதியான தீர்மானம் இதுவாகும். எனவே இதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. மேலதிக வேலை நேர கொடுப்பனவு தொடர்பில் இனி பேசுவது பிரயோசனமற்றது.
இவ்வாறு அடிப்படைச் சம்பளமும், மேலதிக வேலை நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் சேவை ஊழியர் ஒருவர் தனது வருகையையும் வேலை முடிவடைந்து செல்வதையும் கை விரல் ரேகைப் பதிவு இயந்திரம் செய்ய முடியாது எனக் கூறினால் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏற்கனவே தபால் திணைக்களத்தின் நிர்வாக அலுவலகங்களில் கை விரல் ரேகைப் பதிவு இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மத்திய தபால் பரிமாற்றத்திலுள்ள மிகக் குறுகிய தரப்பினரே இதனை ஏற்க மறுக்கின்றனர்.
மக்களின் வரிப் பணத்தில் சம்பள அதிகரிப்பினையும் வழங்கி மேலதிக வேலை நேர கொடுப்பனவையும் வழங்கியுள்ள நிலையில் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்க முடியாது எனக் கூறினால் அதற்கு இடமளிக்க முடியாது.
19 கோரிக்கைகளில் எஞ்சியுள்ள இந்த இரு கோரிக்கைகளையும் எக்காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தமக்கு பொறுத்தமான வேறு தொழிலை தேடிக் கொள்ளலாம்.
இம்முறையாவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எனவே இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை சற்றுப் பொறுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment