(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதை ஏற்கிறோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஊடாக தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய நாடுகள் சபை எங்களின் சர்வதேச நண்பன். அதன் உதவிகள் எங்களுக்கு எப்போதும் தேவையானது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிமெடுப்பதில்லை என்பது தவறான கருத்தாகும். தேசிய மக்கள் சக்தி அவ்வாறு நடந்துகொள்வதில்லை. நாங்கள் இனங்கள், பாலினங்கள் என எது தொடர்பிலும் பார்ப்பதில்லை. சகலர் தொடர்பிலும் அவதானம் செலுத்துகின்றோம். வடக்கு மக்கள் தொடர்பிலும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஆனால் வடக்கு அரசியல்வாதிகள் அச்சமடைவது ஏன் என்று தெரியவில்லை.
வடக்கு, கிழக்கு தென் பகுதி மக்களின் சகல பிரச்சினைகளையும் உடனே எங்களால் தீர்க்க முடியாது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றோம். எங்களை தூற்றக்கூடாது. எங்களுக்கு நான்கு வருடங்கள் உள்ளன. நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
மனிதர்களின் மனங்களிலேயே யுத்தம் ஆரம்பிக்கின்றது. மனிதர்களின் மனப்பான்மையிலேயே முறுகல்கள் ஏற்படுகின்றன. இதனால் சமாதானமும் அந்த மக்களின் மனங்களில் இருந்தே வர வேண்டும். மீண்டும் நாடு பாதாளத்திற்குள் தள்ளப்படக்கூடாது. நாங்கள் சில முன்னேற்றங்களை கண்டுள்ளோம்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ச குலரத்ன தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. அதன் இறுதி வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். சர்வதேச ரீதியில் பயங்கரவாத வரைவிலக்கணத்துடன் உள்ளடங்கலாக அதனை மாற்றியமைக்கவுள்ளோம்.
இதேவேளை நீண்டகால சிறைக் கைதிகள் உள்ளனர். இதுவொரு பிரச்சினை என்று தெரியும். இதனால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சிறையில் வாழ்பவர்கள் தொடர்பில் இந்த குழு ஆராயும். இது தொடர்பான அறிக்கையை அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளோம்.
எவ்வாறாயினும் இனவாத அரசியலை நாங்கள் வெறுக்கின்றோம். எந்த சமூகத்திற்கும் பாதிப்பில்லாதவாறே எந்தவித திருத்தங்களையும் மேற்கொள்கின்றோம். அடுத்த வருடங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை காணலாம்.
இதேவேளை நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கரிசனைகளை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். முன்னைய அரசாங்கங்கள் அதனை செய்யாமல் விட்டுச் சென்றுள்ளன. நாங்கள் அதனை நிறைவேற்றுவோம்.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் சிலர் விமர்சனங்களை செய்கின்றனர். ஆனால் இது நீதித்துறையின் சுதந்திரத்தையே காட்டுகின்றது. நீதித்துறையில் நாங்கள் தலையிடுவதில்லை. சட்டம் அதனை செய்யும். இதில் சமூக அந்தஸ்து தொடர்பில் எதுவும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. நடுநிலையாக சுதந்திரமாக நீதித்துறை செயற்படும்.
ஐ.நா எங்களின் சர்வதே நண்பனே. அதன் உதவிகள் எங்களுக்கு தேவை. அதன்படி செயற்படுவோம். பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன. அது தொடர்பில் உரிய பங்களிப்பை வழங்கும் என்று நினைக்கின்றோம். அத்துடன் ஐ.நாவுக்கு மட்டுமன்றி மக்களுக்கு எது சரியோ அதனையே நாங்கள் செய்வோம்.
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் மறுக்கவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கிய சகல வாக்குறுதிகளையும் நாங்கள் பதவி காலத்துக்குள் நிறைவேற்றுவோம் என்றார்.
No comments:
Post a Comment