(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் பற்றி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாதாள குழுக்களின் எழுச்சிக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கருத்து அவதானத்துக்குரியது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் பாதாள குழு தலைவர்கள் நாட்டை விட்டு ஓடி தலைமறைவானார்கள். பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை கடந்த அரசாங்கங்கள் எடுக்கும்போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு பாதாள குழுக்களை பாதுகாத்தது அதன் விளைவை இன்று நாடு எதிர்கொள்கிறது.
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் நாளுக்குநாள் தீவிரமடைந்துள்ளன. பொலிஸாரின் முன்பாக துப்பாக்கிதாரிகள் தமது இலக்கினை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாதாளக் குழுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
இலங்கையின் அரச நிர்வாக கட்டமைப்பில் பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் பிரதானவையாக காணப்படுகிறது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் முறைமையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிக்குள்ளாக்கினார். இதற்கு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் காணப்படுகிறது. ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. ஆகவே தேர்தலை நடத்த அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment