(இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியாக பதவி வகித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவைவை மாத்திரம் பாதுகாக்க அரசாங்க முயற்சிப்பது எவ்விதத்தில் நியாயமாகும். இராணுவத்தின் மீது பற்று இருக்குமாயின் அருண ஜயசேகர பதவி விலக வேண்டும் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளதால் அவர்களுக்கு மாத்திரம்தான் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர வேண்டும் என்று ஆளும் தரப்பின் இளம் உறுப்பினர்கள் குறிப்பிடுவது அவர்களின் புலமையை வெளிப்படுத்துகிறது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம்தான் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. சம்பிரதாயத்தின் பிரகாரமே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுகிறது. நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எவ்வித வரையறைகளும் கிடையாது.
பாராளுமன்றத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆகவே அமைச்சரவை அமைச்சர்களுக்கு மாத்திரம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவில்லை என்பதை ஆளுங்கட்சி விளங்கிக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதற்கு போலியான காரணிகளை குறிப்பிடுகிறது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்துடன் இராணுவத்தின் ஒரு சில அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது தரப்பினர் கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அக்காலப்பகுதியில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக அருண ஜயசேகர பதவி வகித்தார்.
இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டு கட்டளைத் தளபதியாக பதவி வகித்த அருண ஜயசேகரவை மாத்திரம் பாதுகாக்க அரசாங்கம் முயற்சிப்பது எவ்விதத்தில் நியாயமாகும். இராணுவத்தின் மீது பற்று இருக்குமாயின் அருண ஜயசேகர பதவி விலக வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment