கண்டி, எசல பெரஹெராவினை பார்வையிட வருவோர் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை, பெரஹெரா காலப்பகுதியில் கண்டி நகரத்திற்குள் கழிவுகளை முறையாக அகற்றுமாறு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி மூணமலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கடந்த 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வருட எசல பெரஹெரா ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடந்த வருடங்களில் எசல பெரஹெரா காலத்தில் தினமும் கணிசமான அளவு திண்மக்கழிவுகள் உருவாகின.
இதில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாகும். குறிப்பாக, இந்த பிளாஸ்டிக் கழிவுகளில், ஊர்வலத்தைக் காண வருவோர் கொண்டுவருகின்ற மெழுகு இலைகளிலான பாய்களே அதிகமாகும்.
இதனை கொண்டுவருவதை தவிர்க்குமாறு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், அவ்வாறு கொண்டுவந்தால் அதனை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் அல்லது வீடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
அதேவேளை, மத்திய மாகாணத்திலுள்ள சுமார் 43 பாடசாலைகளின் சுற்றாடல் கழகங்களிலுள்ள மாணவர்களைப் பயன்படுத்தி ஊர்வல நாளில் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மத்திய மாகாண அலுவலகம், ஸ்ரீ தலதா மாளிகை, மாகாண கல்வித் திணைக்கள துறை, கண்டி மாவட்ட செயலகம், கண்டி மாநகர சபை, சுகாதர வைத்திய அதிகாரி அலுவலம் போன்ற பல அரச நிறுவனங்கள் இணைந்து குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கும் பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கும் கைகோர்த்துள்ளன.
அத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தெரு நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, அதே நேரத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனைகள் மற்றும் கழிவு மேலாண்மை திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன.
குப்பைகளை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குப்பைகளை கொட்டுமாறும் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட உக்காத பொருட்களின் பயன்பாட்டினை குறைப்பதன் மூலமும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு" அவர் வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment