எதிர்வரும் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இலங்கை ஒருநாள் மற்றும் ரி20 அணிகளில் முக்கிய மாற்றங்களை செய்ய இலங்கை அணித் தேர்வுக் குழுவினர் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரில் இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை இழந்த நிலையில் அணியில் உள்ள குறைகளை சரிசெய்யும் முயற்சியாகவே அணியில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
குறிப்பாக எதிர்வரும் செப்டெம்பர் 09 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி தொடராகவும் இலங்கை அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 தொடர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக இலங்கை அணி ஓகஸ்ட் 23 ஆம் திகதி சிம்பாப்வே பயணமாகவுள்ளது.
இதற்கான ரி20 குழாத்தில் தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, எஷான் மாலிங்க மற்றும் ஜெப்ரி வன்டர்சே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஹசரங்க அண்மையில் உபாதைக்கு உள்ளான நிலையில் அவருக்கு ஓய்வு வழங்கும் வகையிலேயே அணியில் சேர்க்கப்படவில்லை. மற்ற வீரர்கள் திறமையை வெளிப்படுத்தாத நிலையில் அணியில் இடம்பெற தவறியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை ஏ மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சோபித்து வரும் நுவனிந்து பெனாண்டோ மற்றும் கமில் மிஷார ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் நுவனிந்து இலங்கை ரி20 குழாத்தில் தற்போது இடைவெளியாக இருக்கும் நான்காவது வரிசைக்கு நேரடியாக அணியில் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த இடத்திற்கு ஆடிய சந்திமால் மற்றும் அவிஷ்க இருவருமே சோபிக்கத் தவறி இருந்தனர்.
அதேபோன்று அதிரடியாக துடுப்பெடுத்தாடக் கூடிய மிஷார, குசல் பெரேராவுக்கு மாற்று வீரராக குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.
இலங்கை அதிரடி வீரர்களில் ஒருவராக கருதப்பட்டு வந்த அவிஷ்க பெர்னாண்டோ தொடர்ந்து சோபிக்க தவறி வரும் நிலையில் ரி20 மற்றும் ஒருநாள் இரு குழாம்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
ஹசரங்க இல்லாத நிலையில் அவரது இடத்திற்க சகல துறை வீரரான துஷான் ஹேமன்த இடம்பெற்றுள்ளார். எனினும் ஆசிய கிண்ணத்திற்காகவே ஹசரங்கவுக்கு அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் பங்களாதேஷ் ரி20 தொடரில் இடம்பெறத் தவறிய வேகப்பந்து வீச்சாளர் துஷமன்த ஷமீர அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் ஏஷான் மாலிங்கவுக்கு பதிலே அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கையின் அனுபவ பந்துவீச்சாளரான சமீர நுவன் துஷார, மதீஷ பதிரண மற்றும் பினுர பெர்னாண்டோவுடன் இணைந்துள்ளார்.
எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு உள்ளுர் போட்டிகளில் சோபிக்கும் விஷான் ஹலம்பகேவை தேர்வாளர்கள் மேலதிக வீரராக அணியில் சேர்த்துள்ளனர்.
இதற்கு மாறாக ஒருநாள் குழாம் அதிக மாற்றம் இல்லாததாக உள்ளது. கடந்த ஜூலையில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிய இலங்கை குழாத்தில் ஒரே சிறு மாற்றங்களாக மத்திய வரிசையை பலப்படுத்தும் வகையில் நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் பவன் ரத்னாயக்க ஆகியோர் இணைக்கப்பட்டடுள்ளனர்.
இலங்கை உத்தேச குழாம்கள்
ரி20 குழாம்: சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், நுவனிந்து பெர்னாண்டோ, தசுன் ஷானக்க, துனித் வெள்ளாலகே, துஷான் ஹேமன்த, மஹீஷ் தீக்ஷன, சாமிக்க கருணாரத்ன, மதீஷ பதிரண, நுவன் துஷார, பினுர பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, விஷான் ஹலம்பகே.
ஒருநாள் குழாம்
சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிசங்க, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்னாயக்க, நுவனிந்து பெர்னாண்டோ, துனித் வெள்ளாலகே, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வன்டர்சே, மிலான் ரத்னாயக்க, டில்ஷான் மதுஷங்க, அசித்த பெனாண்டோ, துஷ்மன்த சமீர.
No comments:
Post a Comment