(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அரசாங்கம் பாரியளவில் அதிகரித்துள்ளதாலே சுங்கத்தின் வருமானம் அதிகரித்துள்ளது. வாகனங்களுக்கான வரியை நூற்றுக்கு 200 இல் இருந்து 600 வரை அதிகரித்துள்ளது. இதனால் மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாரளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாரளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான விவதாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சுங்கத்தின் வருமானம் ஒரு ரில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த வருமான அதிகரிப்பு பாரிய வரி அதிகரிப்பினால் கிடைத்த வருமானமே தவிர, சுங்கத்தினால் ஏதாவது உற்பத்தி செய்து பெற்றுக்கொண்ட வருமானம் அல்ல.
இறக்குமதியாளர்கள் கொண்டுவரும் பொருட்களுக்கு அரசாங்கம் பாரியளவில் வரி அறவிடுகிறது. அதனாலே சுங்கத்தின் வருமானம் ஒரு ரில்லியன் வரை அதிகரித்துள்ளது. இது பாரிய விடயம் அல்ல.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நூற்றுக்கு 200 இல் இருந்து நூற்றுக்கு 600 வரை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி அதிகரிக்கும்போது சுங்கத்தின் வருமானம் அதிகரிப்பது என்பது சாதாரண விடயம்.
அரசாங்கம் இறக்குமதியாளர்களுக்கு அதிகரித்திருக்கும் வரிகளை, அவர்கள் நுகர்வோரிடமிருந்தே அறவிடுகின்றனர். அதனால் இன்று மக்களுக்கு பொருட்களை விலைக்கு வாக்கும் இயலுமை குறைந்துள்ளது.
அதனாலே நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே அரசாங்கம் வருமானம் குறைந்த மக்களுக்கான அஸ்வெசும நிவாணர திட்டங்களை அதிகரிக்கிறது.
குறிப்பாக 2020 இல் சாதாரணமாக மத்திய வகுப்பில் இருப்பவர்கள் பயன்படுத்தும் சுசுகி, வகன்ஆர், எல்டா போன்ற வாகனம் 25 இலட்சத்துக்கே இருந்தது. தற்போதுபடி வாகனம் 75 இலட்சம் ரூபா, வகன்ஆர் 95 இலட்சம் ரூபா, ஜப்பான் எல்டோ கார் 72 இலட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளது.
இவ்வாறு வாகனங்களுக்கான வரியை அதிகரித்து, மக்களுக்கு சாதாரண விலைக்கு வாகனம் பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
சாதரண மக்கள் பயன்படுத்தும் இந்தியாவின் டிஸ்கவரி மோட்டார் கைக்கிள் 2020 இல் 2 அரை இலட்சம் ருபாவுக்கே இருந்தது. தற்போது அது 5 இலட்சம் ரூபா. ஒள்றரை இலட்சத்துக்கு இருந்த சி.டி 100 ரக மோட்டார் சைக்கிள் இன்று 3 அரை இலட்சம் ரூபா. பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் 2020 இல் 2 அரை இலட்சத்துக்கு இருந்தது. தற்போது 6 இலட்சம் ரூபா.
ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் இளைஞர்களை பார்த்து, ஜப்பான் மோட்டார் சைக்கிள் ஓட்ட ஆசை இல்லையா என்றே கேட்டார். ஆனால் ஜப்பான் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைவிட சாதாரண துவிச்சக்கரம் ஒன்றைக்கூட விலைக்கு வாங்க முடியாத அளவுக்கு அரசாங்கம் வரி அதிகரித்துள்ளது.
அதேபோன்று அரசாங்கம் ஒரு கிலாே அரிசிக்கு 65 ருபா வரி அறவிடுகிறது. அதேபோன்று ஒரு கிலோ உப்புக்கு 40 ரூபா வரி அறவிடுகிறது. கோதுமை மா ஒரு கிலோவுக்கு 46 ரூபா வரி அறவிடுகிறது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 9 மாதங்களில் அரச நிறுவனங்கள் மூலம் வருமானத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறதா என கேட்கிறோம். துறைமுகத்துக்கு வரும் பொருட்களுக்கு பாரியளவில் வரி அறவிட்டே அரசாங்கம் வருமானத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பயன்படுத்தப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனம் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் இருந்து வந்த வாகன கப்பல்கள் துறைமுகத்தில் வாகனங்களை இறக்குவதற்கு இடமில்லை என சில கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளன. இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது.
சுங்க திணைக்களம் ஜனாதிபதியின் கீழே இருக்கிறது, இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களம் இருப்பது நிதி அமைச்சின் கீழ், இந்த இரண்டும் இருப்பது ஜனாதிபதிக்கு கீழாகும். அப்படியிருக்கையில் இந்த இரண்டு தரப்பினரையும் ஒரு மேசைக்கு அழைத்து ஏன் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியாது.? வினைத்திறன், இயலுமை இல்லாமையே இதற்கு காரணமாகும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு துறைமுகம் டொலர்களில் நட்டஈடு வழங்க வேண்டி இருக்கிறது. அந்த நட்டஈடு சீனாவுக்கே செல்கிறது. இதன் காரணமாக வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கப்படும்போது, அதனால் மக்களே பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால் அரசாங்கம் விரைவாக இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து, அந்த வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் செலுத்த வேண்டிவரும் நட்டஈட்டை குறைத்துக் கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment