புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது கல்வி அமைச்சினுடையதோ, ஜனாதிபதி அனுரவினுடையதோ அல்லது பிரதமர் ஹரிணியினுடையதோ அல்ல. மாறாக, அனைவரின் தெளிவான பங்களிப்புடனும், முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு ஏற்பவும் நேர்மறையான மாற்றங்களைச் செய்து, நம் பிள்ளைகளுக்காக ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பாகும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து வட மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கும் வகையில், வட மாகாண தலைமைச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் (02) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்ததாவது, “தற்போதைய கல்வி முறையில், முதலாம் ஆண்டில் நுழையும் ஒரு பிள்ளை, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடனோ மகிழ்ச்சியுடனோ பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வதில்லை.
பிள்ளைகளுக்கு உகந்த பாடசாலைச் சூழலும், இணக்கமான கற்பித்தல் முறையும் உருவாக்கப்பட வேண்டும். பாடசாலைகள் ஊடாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழில்முனைவோர், கலைஞர்கள் மற்றும் பல்வேறு தொழிற்திறன் கொண்ட நிபுணர்களையும் நாம் உருவாக்க வேண்டும்.
புதிய கல்விச் சீர்திருத்தத்தில், ஒவ்வொரு மாகாணமும், மாவட்டமும், வலயமும் முக்கியமானது. சமத்துவம் அங்கிருந்துதான் தொடங்குகிறது.
நம் நாட்டில் உள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்க நாம் விரும்பினால், அனைத்து வளங்களையும் ஒரு பிராந்தியத்திற்கோ அல்லது ஒரு மாவட்டத்திற்கோ மட்டும் ஒதுக்க முடியாது. அவை நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதில், பின்தங்கிய மற்றும் வளங்கள் குறைந்த பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். பின்தங்கிய பாடசாலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் வெற்றிடங்களுக்குத் தீர்வு காண்பதுடன், அனைத்துப் பாடசாலைகளிலும் இலக்கமுறை (டிஜிட்டல்) வசதிகள், கற்றல் வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், சுகாதார வசதிகள், குடிநீர், விளையாட்டு மைதானங்கள், ஆய்வுகூடங்கள், ஆக்கத்திறனை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் கலை, அழகியல் பிரிவுகள் ஆகியவை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான ஒரு சிறந்த திட்டம் எங்களிடம் உள்ளது.
மேலும், மதிப்பீட்டு முறையும் மிகவும் முக்கியமானது. பிள்ளைகளுக்கு நட்புறவான கற்றல்-கற்பித்தல் சூழல் நமக்குத் தேவை. பிள்ளைகளுக்கு இவற்றை உறுதிசெய்து, சமூகப் பொறுப்புள்ள ஒரு குடிமகனைப் பாடசாலையிலிருந்து உருவாக்க வேண்டும். அதற்காகவே, நாங்கள் இந்தப் பொது உரையாடலையும் கலந்துரையாடலையும் முன்னெடுத்து வருகிறோம்.
ஏனெனில், இது கல்வி அமைச்சின் சீர்திருத்தமோ, ஹரிணி அமரசூரியவினுடைய சீர்திருத்தமோ, அல்லது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினுடைய சீர்திருத்தமோ அல்ல. இது இலங்கையின் தேசிய கல்விச் சீர்திருத்தம். நாம் அனைவரும் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நாம் அனைவரும் இதில் ஈடுபட வேண்டும்.
இந்தச் சீர்திருத்தத்தை நாங்கள் படிப்படியாக மேற்கொள்வதால், இந்தக் கலந்துரையாடல் தொடர வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் தயார்படுத்திக் கொண்டு தொடங்க வேண்டுமென்றால், இந்தச் சீர்திருத்தங்களுக்காக குறைந்தது இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனவே, 2026 ஆம் ஆண்டில் 1 ஆம் மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு இந்தச் சீர்திருத்தங்களைத் தொடங்குகிறோம்.
உங்கள் பின்னூட்டங்கள், முன்மொழிவுகள் மற்றும் கருத்துகளை நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.
நெகிழ்வுத்தன்மையுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்துவருகிறோம். இதற்கான ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வை எங்களிடம் உள்ளது.
நம் நாட்டில் உள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, சீர்திருத்தத்தின் ஒரு அங்கத்தை பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம். இது முழுமையான கல்வி கட்டமைப்பிற்கான ஒரு சீரமைப்புத் தொகுப்பு.
மத்திய அமைச்சுப் பாடசாலைகள், மாகாணப் பாடசாலைகள் என்று பிரிப்பதன் மூலம் இதைச் செய்ய முடியாது. நாட்டின் அனைத்துப் பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகள். எனவே, நாம் தனித்தனியாகச் செயல்பட முடியாது. ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும். பிள்ளைகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.
கல்விச் சீர்திருத்தம் குறித்து ஒரு உரையாடலை ஏற்படுத்துங்கள். ஆசிரியர் சங்கங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நாங்கள் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ளோம். நாங்கள் தொடர்ந்து அதைச் செய்வோம். இதில் பெற்றோர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஈடுபட வேண்டும்” என ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் வட மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment