பிரபல யூடியூப்பர் சுதா என அழைக்கப்படும் சுதத்த திலகசிறிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலகசிறி தனது யூடியூப் சேனலில் தெரிவித்த கருத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி ஐக்கிய தேசியக் கட்சி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சி.ஐ.டி.) முறைப்பாடு செய்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னதாக கடந்த வியாழக்கிழமை யூடியூப் தளத்தில் காணொளியொன்றைப் பதிவேற்றிய சுதத்த திலகசிறி, வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவது உறுதி என்றும், அதன்பின் 14 நாட்கள் விளக்கமறியலுக்கு அனுப்பப்படுவார் என்றும் அடித்துக் கூறியிருந்தார்.
குறித்த கூற்றுக்கு எதிராகவே ஐக்கிய தேசியக் கட்சி நேற்று (22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழுவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னரே அது குறித்து சுதத்த திலகசிறி எவ்வாறு அறிந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி தனது முறைப்பாட்டில் கோரியுள்ளது.
ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னரே அது குறித்து யூடியூப் பதிவர் ஒருவர் செய்தி வெளியிடுவது தற்செயலான சம்பவமாக இருக்க முடியாது என்பதுடன், ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என்றும் பல்வேறு அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment