(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை நடத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியிலான நிர்வாக அதிகாரங்களை வழங்க வேண்டும். ஏனைய வாக்குறுதிகளை போன்று மாகாண சபைத் தேர்தல் வாக்குறுதியையும் அரசாங்கம் பொய்யாக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை, நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நடுத்தர மக்களின் வாகன கொள்வனவு இலக்கு வெறும் கனவாக மாறியுள்ளது. அதீத வரியினால் சாதாரண வாகனத்தை கூட கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வாகன கொள்வனவு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அரசாங்கம் ஒன்றை குறிப்பிடுகிறது. தொழிற்சங்கத்தினர் பிறிதொன்றை குறிப்பிடுகின்றனர். ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு அரச சேவையாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆகவே அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.
கஞ்சா பயிர்ச் செய்கைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதை தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன். பொருளாதார மீட்சிக்கு ஒரு சில முற்போக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கம் விலகியுள்ளமை சிறந்தது. கஞ்சா பயிர்ச் செய்கைக்கு மீரிகம பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளமை பொருத்தமற்றது. முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு சொந்தமான பிறிதொரு பகுதியை அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். எதிர்வரும் மாதத்துடன் ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சாதகமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை நடத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியிலான நிர்வாக அதிகாரங்களை வழங்க வேண்டும். ஏனைய வாக்குறுதிகளை போன்று மாகாண சபைத் தேர்தல் வாக்குறுதியையும் அரசாங்கம் பொய்யாக்கக் கூடாது என்றார்.
No comments:
Post a Comment