சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட 155, 167, 134, 102, 112 பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை, மட்டக்குழி, அங்கொடை, கல்கிசை, கொம்பெனித்தெரு போன்ற பகுதிகளிலுள்ள மக்கள், நேரடி பஸ் சேவைகள் இல்லாமையினால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, கொட்டாஞ்சேனையிலுள்ளவர்கள் இரத்மலானைக்கு செல்வதாயின், குறுகிய தூரத்திற்கு உட்பட்ட இப்பகுதிக்குச் செல்வதற்கு இரண்டு, மூன்று பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
முன்னர் நீண்ட காலமாக சேவையிலிருந்த, மட்டக்குழி - இரத்மலாணை சொய்ஸாபுர 155 வழித்தட பஸ் (Route bus), பாலத்துறை (தொட்டலந்த) - கல்கிஸ்சை 167 வழித்தட பஸ், அங்கொட - கல்கிலை 134 வழித்தட பஸ் முதலான இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதையடுத்து, மக்களும், மாணவர்களும் குறிப்பாக, கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் சிறுவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று, மொரட்டுவ கொட்டாஞ்சேனை 102 வழித்தட பஸ், மாரகம (காலி வீதி ஊடாக) கொட்டாஞ்சேவை 112 வழித்தட பஸ் போன்ற சில பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளமையினால், இச் சேவையினை பெற்றுவந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து முன்னைய அரசாங்க காலப்பகுதியில் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுச்சென்ற போதிலும் எந்த பலனும் கிட்டவில்லையெனவும், தற்போதைய போக்குவரத்து அமைச்சர் இதுவிடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment