(எம்.மனோசித்ரா)
சுகாதார அமைச்சின் சில உயர் அதிகாரிகளின் தீர்மானத்தால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சுமார் 135 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது. ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமைச்சரிடமிருந்து தகுந்த பதில் கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் சுகாதார கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும். எது எவ்வாறிருப்பினும் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்கள் தடையற்ற மருத்துவ சேவையை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
நாட்டில் 23,000 சிரேஷ்ட வைத்தியர்கள் காணப்படுகின்றனர். வருடாந்தம் 2,000 வைத்தியர்கள் இந்த கட்டமைப்பில் இணைகின்றனர். எனவே இவர்களுக்கான நியமனங்களை முறையாக வழங்க வேண்டியதும் அவசியமானதாகும். அத்தோடு இடமாற்றங்களும் முறையாக இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பெற்றால் மாத்திரமே சுகாதார கட்டமைப்பின் இருப்பினை தீர்மானிக்க முடியும்.
சுகாதார அமைச்சின் சுகாதார சேவைப்பிரிவின் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களின் செயற்பாடுகளால் 23,000 சிரேஷ்ட வைத்தியர்களின் இடமாற்றங்கள் முற்றாக சீர்குலைந்துள்ளன. இது சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்ட ஒரு குழப்பமாகும். ஆனால் சுகாதார அமைச்சரிடமிருந்து இதற்கான ஸ்திரமான தீர்வு கிடைக்கவில்லை. இந்த பிரச்சினை தீவிரமடைந்தமைக்கான காரணமும் இதுவேயாகும்.
2025ஆம் ஆண்டுக்கான இடமாற்ற பட்டியல் 9 மாதங்கள் தாமதமாகவே வெளியானது. அதில் சுமார் 5,000 வைத்தியர்கள் உள்ளடங்குகின்றனர். அந்த பட்டியலில் காணப்பட்ட 78 வெற்றிடங்கள் சட்டத்துக்கு முரணாக தன்னிச்சையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் குறித்த 78 வைத்தியர்கள் மாத்திரமின்றி, பட்டியலுள்ள அனைவரும் பாதிக்கப்படுவர்.
அது மாத்திரமின்றி பின்தங்கிய பிரதேசங்களுக்கான வைத்தியர் நியமனங்களும் இவ்வாறு தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் பிரதான வைத்தியசாலைகள் உட்பட சுமார் 135 பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படவுள்ளது.
ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவையும் அவர்கள் இந்த யுகத்துக்கே அழைத்துச் செல்லவே முற்படுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு அமைச்சரிடமிருந்து தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் பிரச்சினைகளுக்கான முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால் எமது தீர்மானத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment