பெருந்தொகை சொத்தை சேகரித்துள்ளதாக சிவில் புலனாய்வு முன்னணியைச் சேர்ந்த முகமே தெரியாத ஒருவர், நிதிக் குற்றவியல் பிரிவில் தமக்கு எதிராக, முறையிட்டுள்ளதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்த விசாரணை விடயங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
முறைகேடாக சொத்துக்களை சேரித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறித்து அவரிடம் வினவியபோதே, இவ்வாறு சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.
இது பற்றி மேலும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், சட்டவிரோதமாக தாம், சொத்துக்களை சேர்த்ததாக சிவில் புலனாய்வு முன்னணியின் தலைவர் சஞ்சய மஹாவத்தே, நிதிக் குற்றவியல் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கு முன்னரும் எனக்கெதிராக இவ்வாறு குறச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இது குறித்து சம்பந்தப்பட்ட விசாரணை பிரிவுகளிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், இதுவரை இது தொடர்பில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.
தமிழ் மக்களுக்கு அரச நிறுவகங்களில் வழங்கப்படும் நியமனங்களின்போது, சில தமிழ் அரசியல்வாதிகள் தமது உறவினர்களையும் மதம் சார்ந்தவர்களையும் நியமிப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு பதிலளித்த சிறிதரன் எம்.பி, அவ்வாறான விடயங்களை நான் அறிந்ததில்லை என்றார்.
மேலும் இதுபற்றி விளக்கிய அவர், எனக்கு முகம் தெரியாத சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நிதிக் குற்றவில் பிரிவில் என்மீது முறைகேடான சொத்துக் குவிப்பு பதிவுகளை மேற்கொண்டுள்ளார். இது ஒரு நல்ல விடயம்.
எனது பெயரில் இலங்கையிலோ அல்லது வௌிநாடுகளிலோ எனக்குச் சொத்துக்கள் இருந்தால் கண்டுபிடியுங்கள். மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
சட்டவிரோத சொத்துக்களை கண்டுபிடிப்பது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தார்மீகக் கடமை. இந்தப் பிரிவு இதனை சரியாக செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
என்னைப் பொறுத்த வரையில் நான், சாதாரண ஆதிரியராக அதிபராக அரச சேவையில் பணியாற்றினேன். இதன் பின்னர் அரசியல் பயணத்தை மேற்கொண்டேன்.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான பயணமாகவே எனது அரசியல் செயற்பாடுகள் உள்ளன. தமிழ் தேசியத்திற்காவே எனது பயணம் தொடர்கிறது.
இந்நிலையில், என்மீதான இந்தப் பழி சுமத்தல்கள், காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலானவையாக உள்ளன. இப்பின்புலத்தில் எம்மவரே உள்ளதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்ட பொழுது என்னுடன் சேர்ந்திருந்து, எனக்காக செயற்பட்டவர்களே எனக்கெதிராக இடைக்காலத் தடையைப் பெற்றுக் கொண்டனர்.
கட்சியில் சேர்ந்து ஆறு மாதங்கள் கூட பூர்த்தியாகாதவர்களை பின்னணியில் வைத்துக் கொண்டே எனது தெரிவுக்காக இடைக்காலத் தடை பெறப்பட்டது.
இதேபோன்றே அண்மைய காலங்களில் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் எனக்கு எதிராக மிக மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கட்சியில் வழக்குத் தாக்கல் செய்து இடைக்கால தடையை பெற்றவர்களும் இதன் பின்னணியிலிருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த சிவில் முன்னணியைச் சேர்தவர் தாக்கல் செய்த இந்த முறைப்பாட்டின் உண்மையை வெளிப்படுத்துவது காலத்தின் கடமை. எனக்கு சொத்துக்கள் இருந்தால் அவற்றை உறுத்திப்படுத்த வேண்டும்.
முறைகேடாக சொத்துக்களை சேகரிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. ஏற்கனவே என்மீது சுமத்தப்பட்ட முறைகேடான சொத்து குறித்த விடயங்களை சம்பந்தப்பட்ட விசாரணை பிரிவுக்கு சமர்ப்பித்தபோதிலும், இதுவரை அந்தப்பிரிவுகள் விசாரணைகைளை மேற்கொள்ளவில்லை.
ஏ.கே.பிள்ளை
No comments:
Post a Comment