ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் பிரகாரம், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்த குறிகாட்டியின் பிரகாரம், 96 வது இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91 வது இடத்தில் இலங்கை கடவுச்சீட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் நான்கு இடங்கள் முன்னேறியிருந்த இலங்கை கடவுச்சீட்டு, இம்முறை ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களை கருத்தில் கொண்டு “தி ஹென்லி 2025” கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விசா இல்லாமல் 193 நாடுகளுக்கு பயணிக்கக் கூடிய சிங்கப்பூர் கடவுச்சீட்டு இந்தத் தரப்படுத்தலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கு விசாயில்லாமல் பயணிக்க முடியும். இந்நிலையில், இந்த நாடுகளின் கடவுச்சீட்டுகள் இரண்டாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏழு ஐரோப்பிய நாடுகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. இதன்படி, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன.
நியூசிலாந்து, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை ஐந்தாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறியனும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இரண்டும் தலா ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் முறையே ஆறாவது மற்றும் 10 ஆவது இடங்களில் உள்ளன.
இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி, 85 வது இடத்திலிருந்து 77 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தற்போது 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment