கல்முனை பிரதேச கடலரிப்பு அபாயம் தொடர்பாக அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்ததுடன் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று (07.07.2025) கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் டேனி பிரதீப் குமாரை திணைக்களத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது, கல்முனை கடற்கரைப் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் கடலரிப்பு அபாயத்தைப் பற்றி தீவிரமாக சுட்டிக்காட்டியதுடன், அதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் இடர்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.
கடலரிப்பால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாஹுர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப்பையும், அதன் அருகிலுள்ள வீதியையும் கடல் உலுக்கியுள்ளதோடு, மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரமும் பலவீனமடைந்துள்ளதையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும், மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் கடற்கரைப் பகுதி மற்றும் ஹுதா பள்ளிவாசல் திடல் பகுதிகளும் கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்த அபாயமான சூழ்நிலையை ஆழமாக கவனித்து, அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை உடனடியாக ஒருங்கிணைத்து செயலில் ஈடுபடுத்துமாறு பணிப்பாளர் நாயகத்திடம் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment