பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் மற்றும் முறைப்பாட்டாளரின் சாட்சியங்கள் மீதான விசாரணைகள் நேற்று (01) நிறைவுக்கு வந்துள்ளன.
உயர் நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு முன்னிலையில் நேற்றையதினம் முறைப்பாட்டாளர் சார்பிலான இரண்டு சாட்சியாளர்கள் சாட்சியளித்திருந்தனர்.
உத்தியோகபூர்வ பணிக்காக வெளிநாடு சென்றிருந்த முறைப்பாட்டாளரின் சாட்சியாளர்கள் இருவரிடமிருந்து ஜூன் 26ஆம் திகதிக்குப் பின்னர் சாட்சிகளைப் பெற்றுக்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணைக்குழுவில் கலந்துகொண்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா மற்றும் பொலிஸ் மாஅதிபரின் தரப்பினர் இணங்கிக் கொண்டதற்கு அமைய இந்த இரு சாட்சியாளர்களும் சாட்சியமளித்தனர்.
அத்துடன், இரு தரப்பின் எழுத்துமூல சமர்ப்பிப்புக்களையும் ஜூலை 08ஆம் திகதி பி.ப 3.30 மணிக்கு முன்னர் விசாரணைக் குழு முன்னிலையில் சமர்ப்பிப்பதற்கும் சட்ட மாஅதிபரின் பிரதிநிதிகளும், பிரதிவாதியின் தரப்பினரும் இதன்போது இணங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment