மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்த அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 6, 2025

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்த அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் சட்ட ரீதியான ஒருசில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். ஆகவே இதற்கமைய அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சகல தரப்பினருடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று மாகாண சபைகள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ள விடயம் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் தேர்தலை நடத்துவதற்கு கடந்த மாதங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அமைச்சுசார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா முன்வைத்த திருத்த யோசனை மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு மதிப்பளித்து தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.

மாகாண சபை முறைமையில் காணப்படும் ஒருசில சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். குறுகிய அரசியல் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்பட்டால் அது நிர்வாக கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே மாகாண சபை முறைமை குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.

No comments:

Post a Comment