(இராஜதுரை ஹஷான்)
ஊழலுக்கு எதிரான சகல செயற்பாடுகளுக்கும் அரச அதிகாரிகள் சுயாதீனமான முறையில் ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோடகொட தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் பங்குபற்றுவதற்கு எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. எமக்கு பாரதூரமான சிக்கல் காணப்பட்டது. எந்த அடிப்படையில் மற்றும் முறைமையின் பிரகாரம் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதில் பாரிய சிக்கல் நிலை காணப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் பிரதிவாதியான அரச தரப்பு சார்பில் முன்வைக்கப்பட்ட சத்தியப்பிரமாண பத்திரத்தில் எமக்கு போதுமான தெளிவு கிடைக்கப் பெறவில்லை. இதனால் நாங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், இந்த பொதுமன்னிப்புக்குரிய ஆவணங்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பெற்றுக் கொண்டோம்.
இந்த ஆவணங்களை பரிசீலனை செய்து எந்த அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் விளங்கிக் கொண்டோம். உதய ஆர் செனவிரத்ன பகிரங்கமாக இவ்விடயம் பற்றி பேசுவதற்கு தயாராக இருப்பதை தெரிந்திருந்தால் அவரை ஒரு சாட்சியாக அழைத்திருக்க முடியும்.
இந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் உதய ஆர் செனவிரத்ன மற்றும் மேலதிக செயலாளர் (சட்டம்) சரியான மற்றும் விரிவான குறிப்பை இட்டுள்ளார்கள். ஆகவே அரச அதிகாரிகள் என்ற அடிப்படையில் அவர்கள் தமது பொறுப்பினை நிறைவேற்றியுள்ளார்கள்.
அரச அதிகாரிகள் தமது கடமையை செயற்படுத்தும்போது ஊழலுக்கு தாம் பொறுப்புதாரியாகாத வகையில் செயற்படுதல் வேண்டும். அவ்வாறு செயற்படுவது பல்வேறு நெருக்கடிகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு அவசியமானதாக அமையும்.
ஊழலுக்கு எதிரான சகல செயற்பாடுகளுக்கும் அரச அதிகாரிகள் சுயாதீனமான முறையில் ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் அரச சேவையாளர்கள் தமக்களிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment