பங்ளாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்ததற்கு துடுப்பாட்ட வீரர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அந்தப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்காக போராடி அதிக ஓட்டங்களை பெற்ற ஜனித் லியனகே தெரிவித்தார்.
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்றுமுன்தினம் (05) நடைபெற்ற இந்தப் போட்டியில் 249 ஓட்டங்கள் வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி முக்கிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் மத்திய வரிசையில் ஜனித் லியனகே 85 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பெற்றார்.
எனினும் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்க 17 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் இலங்கை அணி 48.5 ஓவர்களில் 232 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்த தொடர் சமநிலை பெற்றிருப்பதோடு தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (08) பல்லேகலவில் நடைபெறவுள்ளது.
‘நாம் சிறிய தவறுகளைச் செய்து போட்டியில் தோல்வியை சந்தித்தோம். அதற்கு துடுப்பாட்ட வரிசையே பொறுப்பேற்க வேண்டும்’ என்று லியனகே போட்டிக்குப் பின்னர் தெரிவித்தார். ‘ஆட்டம் தொடரும்போது ஆர். பிரேமதாச ஆடுகளத்தில் பந்து சற்று சுழலும் என்பது எமக்குத் தெரியும், ஆனால் அதனை நாம் ஒரு சாக்காக குறிப்பிட முடியாது’ என்றும் அவர் தெரிவித்தார்.
பங்களாதேஷ் இடது கை சுழல் வீரர் தன்வீர் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.
லியனகே துடுப்பெடுத்தாடும்போது இலங்கை அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு மத்திய வரிசை வீரராக அவர் குறுகிய காலத்தில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். 45.18 ஓட்ட சராசரியுடனும் 82 வீத ஓட்ட வேகத்துடனும் அவர் போட்டியை நிறைவு செய்பவராக உள்ளார்.
‘நான் துடுப்பெடுத்தாட வந்தபோது வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. நாம் நின்றுபிடித்து ஆடினால் எம்மால் வெற்றி பெற முடியும் என்று எனது சகாக்களுக்கு குறிப்பிட்டிருந்தேன். துரதிருஷ்டவசமாக எம்மால் அதனைச் செய்ய முடியாமல்போனது’ என்றும் அவர் தெரிவித்தார்.
லியனகே 9அவது விக்கெட்டுக்காக துஷ்மன்த சமீரவுடன் இணைந்து 58 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு அணியின் வெற்றியை நெருங்கச் செய்தார்.
எனினும் முஸ்தபீஸுர் ரஹ்மானின் மெதுவான பந்துவீச்சுக்கு ஏமாந்த அவர் பிடியெடுப்பு கொடுத்தார்.
குறிப்பு
* பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 13 ஓட்டங்களைப் பெற்ற வனிந்து ஹசரங்க ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 1000 ஓட்டங்களை பெற்றார். அதேபோன்று முந்தைய போட்டியில் அவர் 100 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எட்டிய வீரராக தென்னாபிரிக்க சகலதுறை வீரர் ஷோன் பொலக்கின் சாதனையை முறியடித்தார். பொலக் 68 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியதோடு ஹசரங்க 65 ஆட்டங்களில் இதனை எட்டியுள்ளார்.
* இந்தப் போட்டியில் குசல் மெண்டிஸ் 31 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றதோடு அவர் 20 பந்துகளில் அரைச் சதம் பெற்று ஆர். பிரேமதாச மைதானத்தில் அதிவேக அரைச்சதம் பெற்றவராகவும் ஒருநாள் பொட்டிகளில் நான்காவது அதிவேக அரைச் சதம் பெற்ற இலங்கை வீரராகவும் இடம்பெற்றார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் குசல் மெண்டிஸ் உள்ளார். எனினும் 1996 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பாகிஸ்தானுக்கு எதிராக சனத் ஜயசூரிய 17 பந்துகளில் அரைச்சதம் பெற்றதை இலங்கை வீரர்கள் எவராலும் இன்னும் முறியடிக்க முடியவில்லை.
* இலங்கை அணி பங்களாதேஷிடம் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டி ஒன்றில் தோற்றிருப்பது கடந்த எட்டு ஆண்டுகளில் இது முதல் முறையாகும். கடைசியாக 2017 மார்ச்சில் தம்புள்ளையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியிலேயே 90 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. அதற்குப் பின்னர் நடைபெற்ற எட்டுப் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்காத நிலையில் இலங்கை அணி எஞ்சிய ஏழு ஆட்டங்களிலும் வெற்றியிட்டியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment