பல்கலைக்கழகங்களில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக, குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பொது நிறுவகங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழு (COPE) மற்றும் பொதுக் கணக்குகள் தொடர்பான குழு (COPA) ஆகியவற்றின் அறிவுறுத்தல்களுக்கமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்கள் தொடர்பாக கணக்காய்வாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் குறித்து கோப் மற்றும் கோபா கூட்ட அமர்வுகளின்போது கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு இந்த குழுக்கள் எம்மை அறிவுறுத்தின. இதற்கு அமைவாக நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UCG) பல்கலைக்கழகங்களுக்கு தொடர்புடைய சுற்றறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பல்கலைக்கழக கொடுப்பனவுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழகங்கள் ஈட்டும் வருமானத்தைப் பயன்படுத்தி தொடர்புடைய கொடுப்பனவுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதில் சிக்கல்கள் உள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விஷயங்களில் சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. நிறுவன அமைப்பு, செயற்றிட்டங்கள் மற்றும் அதிகாரிகள் பற்றாக்குறை போன்ற விடயங்களில் பொதுவான அறிவுறுத்தல்களையும் நாம் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில், பல பல்கலைக்கழக நிர்வாகங்கள் குறித்து பாராளுமன்ற தெரிவுக் குழு மற்றும் பொதுக் கணக்குகள் தொடர்பான குழு நடவடிக்கைகளின்போது கேள்விக்குரிய செலவு, பலவீனமான நிதி முகாமைத்துவம் மற்றும் சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் எடுக்கப்பட்ட சில முடிவுகள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
காணாமல்போன கணக்காய்வு அறிக்கைகள், தேக்கமடைந்த திட்டங்களுக்கு பெரிய தொகைகள் ஒதுக்கப்பட்டமை, சாத்தியக்கூறு ஆய்வுகள் இல்லாமல் தொடங்கப்பட்ட கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் விலையுயர்ந்த உபகரணங்களை பயன்படுத்தாமல் வைத்திருந்தமை தொடர்பாகவும் இந்த குழுக் கூட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டன.
No comments:
Post a Comment