முன்னாள் சிரேஷ்ட அரச சிவில் சேவை உயர் அதிகாரி பிரட்மன் வீரகோன் இன்று (07) காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 94ஆகும்.
ஏழு பிரதமர்களுக்கும், இரு ஜனாதிபதிகளுக்கும் செயலாளராக பணியாற்றிய வரலாற்றுச் சாதனை கொண்ட இவர், இலங்கை அரசியலின் முக்கியமான நபர்களில் ஒருவராக விளங்குகின்றார்.
தனது ஆரம்பக் கல்வியை களுத்துறை ஹொலி குரோஸ் கல்லூரியில் கற்ற இவர், குருத்தலாவ புனித தோமஸ் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட தங்கி கல்வி கற்கும் மாணவர்களில் ஒருவராக கல்வியைத் தொடர்ந்தார்.
அப்போதைய சிலோன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் சமூகவியல் துறைகளில் இரண்டாம் வகுப்பு (மேல் பிரிவு) கலைபட்டம் பெற்ற அவர், பின் Fulbright புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலைப் பட்டம் (MA) முடித்தார்.
1954ஆம் ஆண்டில் இலங்கை சிவில் சேவையில் இணைந்த அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியதுடன், பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் செயலாளராக பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து, நாட்டின் ஏழு பிரதமர்கள் மற்றும் இரண்டு ஜனாதிபதிகளின் கீழ் செயலாளராக பணியாற்றிய இவர், அரசாங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது சேவை, இலங்கை நிர்வாக சேவை வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.
No comments:
Post a Comment