மாத்தளை, உக்குவளை, ரைத்தலாவலை மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை ழுஹர் மற்றும் அஸர் தொழுகைகளுக்கான அதான் ஒலி பெருக்கி ஊடாக ஒலிக்கவில்லை எனத் தெரியவருகிறது.
118 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற அநாமதேய முறைப்பாட்டைத் தொடர்ந்து உக்குவளை பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில் மேற்படி இரு வேளைகளிலும் அதான் கூறுவது நிறுத்தப்பட்டதாக பள்ளிவாசலில் தலைவர் ஏ.சி.எம். நிசார் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இப்பிரதேசத்திலுள்ள யாரோ ஒருவரோ அல்லது குழுவினரோ இவ்வாறு எமது பள்ளிவாசலில் அதான் கூறுவது தமக்கு இடைஞ்சலாக உள்ளதாக பொலிசாருக்கு முறைப்பாடு செய்து வருகிறார்கள். பொலிசாரும் புலனாய்வுப் பிரிவினரும் அவ்வப்போது வந்து இது பற்றி எம்மிடம் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்த பொலிசார் தற்போதும் 118 இலக்கம் ஊடாக முறைப்பாடு கிடைத்துள்ளதால் பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் அதான் கூறுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்கள்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவ்வாறு கோருவதற்கு தமக்கு அதிகாரம் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து நாம் செவ்வாய்க்கிழமை ழுஹர் மற்றும் அஸர் வேளைகளில் ஒலி பெருக்கியில் அதன் கூறவில்லை.
இதனையடுத்து எமது பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. மக்கள் இதற்கு எதிராக கவலை வெளியிட்டனர். பிரதேச அரசியல்வாதிகளின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவுக்கமைய மீண்டும் அதான் கூறுவதற்கு பொலிசார் அனுமதித்தனர். இதனையடுத்த அன்றையதினம் மஃரிப் தொழுகை முதல் ஒலி பெருக்கியிலேயே அதான் கூறப்படுகிறது.
எமது பள்ளிவாசலில் மிகக் குறைந்த சப்தத்திலேயே அதானை ஒலி பரப்புகிறோம். ஒலி பெருக்கிகளைக் கூட நிலத்தை நோக்கியே வைத்துள்ளோம்.
இவ்வாறு முறைப்பாடு செய்பவர்கள் யார் என்று அறியத்தருமாறு நாம் பொலிசாரிடம் கேட்ட போதிலும் அது தமக்குத் தெரியாது எனக் கூறுகின்றனர்.
பிரதேசத்தில் உள்ள சகோதர இன மக்கள் எம்முடன் மிக அந்நியோன்யமாகவே வாழ்ந்து வருகின்றனர். யாரோ தீய சக்திகள் வேண்டுமென்றே பிரச்சினையைத் தோற்றுவிக்க இவ்வாறு முறைப்பாடு செய்வதாகவே நாம் கருதுகிறோம்” என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment