காஸாவில் கடந்த ஐந்து வாரங்களில் இஸ்ரேலிய துருப்பினர் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களில் நிவாரன உணவுப் பொதிகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த 600 க்கும் அதிகமான அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக உதவி தேடுபவர்களையும், கூடாரங்களில் தஞ்சம் புகுந்த மக்களையும் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் காஸா முழுவதும் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான நிறுவனத்தினால் காஸா பகுதிகளில் நிவாரன உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் உணவுப் பொதிகளை பெற வரும் மக்களையே குறிவைத்து இஸ்ரேல் மூர்க்கத்தனமாக படுகொலை செய்து வருகின்றது.
இதனிடையே, மருத்துவமனைகள் மீதும் பாடசாலைகள் மீதும் இஸ்ரேலின் தாக்குதல்களும் தொடர்கின்றன. வடக்கு காஸாவில் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலையான அஷ்ஷிஃபாவை இஸ்ரேலிய படைகள் முற்றுகையிட்டுள்ளமையால் அங்கு எரிபொருள் தீர்ந்துள்ளது. இதனால், அங்கு சிகிச்சை பெற்றுவரும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மரணத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, நேற்றுமுன்தினம் மேற்குக்கரை மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டு திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புகளில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்களை கைது செய்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்ததிலிருந்து நேற்றுமுன்தினம் வரை 57,012 கொல்லப்பட்டதாகவும், 134,592 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Vidivelli
No comments:
Post a Comment