பல வெடி பொருட்கள், போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது : முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின்படி கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 23, 2025

பல வெடி பொருட்கள், போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது : முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின்படி கண்டுபிடிப்பு

வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட வெவ்வேறு வகையான 86 கைக் குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொட, அலுத்பார பகுதியில் நேற்றுமுன்தினம் (21) T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 30 தோட்டாக்கள் மற்றும் 5.65 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் முன்னாள் விடுதலைப்புலி போராளி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் இந்த துப்பாக்கியை வவுனியாவிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்துள்ளதாகவும், மற்றுமொரு தரப்பினருக்கு இதனை வழங்கி, குற்றமொன்றை புரிந்த பின் மீண்டும் வவுனியாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதற்கமைய குறித்த சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிசாரினால் அவருடன் நெருக்கமான மற்றுமொரு சந்தேகநபரை நேற்றையதினம் (22) செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் 10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.

நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான குறித்த சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செட்டிகுளத்திலுள்ள துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள சந்தேகநபரின் வீடுகளில் சோதனையை மேற்கொண்டு முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இதன்போது, பிளாஸ்டிக் பீப்பா ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த வெவ்வேறு வகையான 86 கைக் குண்டுகள், 321 ரி56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 3 கைத்துப்பாக்கிக்கான தோட்டாக்கள், 5,600 போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment